அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேசுவரர் கோயில் உச்சிகால பூஜை கட்டளை துவக்க விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, அவிநாசி மடத்துப்பாளையம் ரோடு ஏரித்தோட்டத்தில் கோசாலையிலிருந்து பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு திருமுறை விண்ணப்பத்துடன், வாத்தியங்கள் முழங்க தேர் வீதிகளின் வழியாக சிவனடியார்கள் ஊர்வலமாக அவிநாசி லிங்கேசுவரர் கோயிலுக்கு வந்தனர். அவிநாசி லிங்கேசுவரர் கோயிலில் விநாயகர் வழிபாடு, வலம்புரிச்சங்கு பூஜை, சிவயாகம், உச்சிக்கால பூஜையும், மகேசுவர பூஜையும் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
அவிநாசியப்பர் கோயிலில் கலசபூஜை, யாக பூஜை, யாகபூஜை அபிஷேக பூஜை கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில், காமாட்சிதாச சுவாமிகள், கூநம்பாட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள், கீரனூர், குருக்கல்பாளையம் ஆளாளசுந்தரர் குருபண்டித சுவாமிகள் மற்றும் ஏராளமான சிவாச்சாரியார் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் இரத்னவேல்பாண்டியன், துணைஆணையர் ஹர்ஷினி, அவிநாசி லிங்கேசுவரர் கோயில் செயல் அலுவலர் சபரிஷ்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல், அறங்காவலர்கள் கருணாம்பிகை பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமார், கவிதாமணி ஆகியோர் செய்திருந்தனர்.