திருவள்ளூர்: திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு பிரசன்ன ஸ்ரீவெங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது ஏராளமான பக்தர்கள், ‘’கோவிந்தா, கோவிந்தா’’ என கோஷமிட்டு பெருமாளை தரிசித்தனர். மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள் பாலித்தாலும் கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானது.
விஷ்ணு தளங்களில் கருடாழ்வார் பெரிய திருவடி என்று அழைக்கப்படுவார். இவர் பெருமானின் வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவார். கருடன் மங்கள வடிவினன், கருட தரிசனம் பாப விமோசனம், நோய் அகலும், குடும்ப நலம், கல்வி மேன்மை அடைதல், கடன்நீங்கி வளம் பெறும் கருட சேவை எம்பெருமானின் அனுகிரகதத்தை பெறுவார்கள் என்பது ஐதீகம். முன்னதாக, கருட சேவைக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காரும் செயல் அலுவலருமான ஏ.பிரகாசம், கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.