திருத்தணி: ஆவணிமாத கிருத்திகை மற்றும் விடுமுறை தினம் என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகையையொட்டி நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.
கிருத்திகை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் திருப்படிகள் வழியாகவும், மலைப்பாதையில் வாகனங்களில் மலைக்கோயில் வந்தடைந்தனர். இதனால், மலைக்கோயில் மாட வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
பக்தர்கள் ஏராளமானோர் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தி வழிபட்டனர். ₹200 சிறப்பு தரிசனம் வழியில் சுமார் 2 மணி நேரமும், இலவச தரிசனம் மார்கத்தில் 3 மணிநேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.