நவக் கிரகங்களின் நாயகனும், பித்ருகாரகர் எனப் பூஜிக்கப்படுபவரும், நமக்கும், மறைந்த நம் முன்னோர்களுக்கும் இடையே பாலமாகத் திகழ்பவருமான சூரிய பகவான், சந்திரனின் ராசியான கடகத்தை விட்டு, தனது ஆட்சி வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே, சிம்ம மாதம் எனவும், ஆவணி மாதம் எனவும் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் சூரியன் அளவற்ற பலத்துடன் சஞ்சரிக்கிறார். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்தது, இந்த ஆவணி மாதத்தில்தான்! இதுமட்டுமல்ல!! பகவான் ஸ்ரீஹயக்ரீவராகவும், முற்பிறவிகளில் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள தவறுகளின் காரணமாக, இப்பிறவியில் நமக்கு ஏற்படும் தடங்கல்கள், துன்பங்கள் ஆகிய அனைத்தையும் பரம கருணையுடன் துடைத்தெறியும் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதாரம் செய்ததும் இந்த ஆவணி மாதத்தில்தான்.
இத்தெய்வீக நன்னாளைத்தான் “விநாயக சதுர்த்தி”என ஆண்டுதோறும் இம்மாதத்தில், நாம் கொண்டாடி மகிழ்கிறோம். மந்திரங்கள் அனைத்திற்கும் தாயாகப் பூஜிக்கப்படும் ஸ்ரீகாயத்ரி மகா மந்திரம் உலக மக்களுக்குக் கிடைத்ததும் இந்த ஆவணியில்தான்! வேதகால மகரிஷிகளை நன்றியுடன் நாம் பூஜிக்கும் ரிஷி பஞ்சமி எனும் தெய்வீக நன்னாளும் இந்த ஆவணியில் கொண்டாடப்படுகிறது. இவற்றிலிருந்து இம்மாதத்தின் தெய்வீகப் பெருமைகளையும், உயர்வையும் நாம் தெரிந்துகொள்ளலாம். முன்பொரு காலத்தில், பாரதப் புண்ணிய பூமியில் மகாபலி எனும் சக்கரவர்த்தி ஆண்டுவந்தார். அவரது ராஜகுருதான் நவக்கிரகங்களின் மகத்தான சக்திவாய்ந்த சுக்கிராச்சாரியார்! தெய்வ பக்தியிலும், தானம் கொடுப்பதிலும் தன்னிகரற்று விளங்கிய அசுர மன்னன் மகாபலி, அவனது பலம் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வந்தது, அதனால், செருக்கும், அகந்தையும் கூடவே வளர்ந்தது.அவனது அகந்தைக்கு முடிவுகட்ட, தனது திருவுள்ளத்தில் தீர்மானித்தார், பகவான் ஸ்ரீஹரி! ஆதலால், வாமனராக வேடம் பூண்டு, அம்மன்னனிடம் சென்றார்.
அவரது தெய்வீக ஒளியைக் கண்டு திகைத்து நின்ற மகாபலி, அவரை நமஸ்கரித்து, “தங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” எனக் கேட்டபோது, பகவானும், “மூன்றடி மண் வேண்டுமென” யாசித்தார்! சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல், மகாபலி வாமனர் கேட்டதைக் கொடுத்தான்! வானுலகையும், பூவுலகையும் தனது திருவடிகளால் அளந்தபோது, சத்திய லோகத்தில் திருவடியைக் கண்ட பிரம்ம தேவர், தனது கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தினால் அதனை மஞ்சனமாட்டி மகிழ்ந்தார்! அந்தத் தீர்த்தமே தேவகங்கையாக மாறி, சொர்க்கலோகத்தில் பாய்ந்தது (பிற்காலத்தில், பகீரதன் எனும் சூரியவம்ச மன்னனின் தவத்தின் சக்தியினால், பூலோத்திற்கு அந்த கங்கை கிடைத்தது). இவ்விதம், பகவான் வாமனராக அவதரித்ததும் இந்த ஆவணி மாதத்தில்தான்! இந்த அவதார தினத்தையே ஓணம் பண்டிகையென மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்விதம்,
ஆவணி 10 (26-8-2024) செவ்வாய், மிதுன ராசிக்கு மாறுதல்.
ஆவணி 10 (26-8-2024) சுக்கிரன், கன்னி ராசிக்கு மாறுதல்.
ஆவணி 15 (31-8-2024) புதன், சிம்ம ராசியில் பிரவேசம்.
ஆவணி மாதத்தின் தெய்வீகப் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.இனி, இப்புண்ணிய மாதத்தில் நிகழவிருக்கும் தெய்வீக தினங்களைப் பார்க்கலாமா?
ஆவணி 1 (17.8.2024) சனிக்கிழமை – சனிப் பிரதோஷம்.
இன்று மாலை சனி பகவான் எழுந்தருளியுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, எள் எண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு, தரிசித்துவிட்டு வருவது மகத்தான புண்ணிய பலன்களைத் தரும்.
ஆவணி 2 (18.8.2024) – ஞாயிற்றுக்கிழமை- சிரவண விரதம்.
இன்று உபவாசம் இருத்தல் பாபங்களைப் போக்கும்.
ஆவணி 3 (19.8.2024) – திங்கட்கிழமை
ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி, ருக், யஜூர் உபாகர்மா. ஆவணி அவிட்டம், ரட்சாபந்தன்.
ஆவணி 4 (20.8.2024) – செவ்வாய்க்கிழமை
காயத்திரி ஜெபம்.
ஆவணி 6 (22.8.2024) – வியாழக்கிழமை
கணநாதனாகிய விநாயக சதுர்த்தி தினத்திற்கு முன்பு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியையே “மஹா சங்கட ஹர சதுர்த்தி” எனக் கொண்டாடுகிறோம். இன்றைய தினத்தில், உபவாசம் இருந்து, விநாயகப் பெருமானுக்கு, தேன், பால், இளநீர், கரும்புச் சர்க்கரை, போன்றவற்றால் அபிஷேகம் செய்வித்து, பக்தி, சிரத்தையுடன் அறுகம்புல்லினால் பூஜைசெய்வித்து, 9 அல்லது 18 கொழுக்கட்டைகள் வெற்றிலை, பாக்கு, பழவகைகளுடன் நைவேத்தியத்துடன், வணங்கி, ஒரு பிரம்மச்சாரியை அழைத்து, அவருக்கு அன்னதானமும், வசதிக்கு ஏற்றாற்போல் வேஷ்டி, துண்டு, தட்சிணையும் கொடுத்து, வணங்கி, சதுர்த்தி விரதமிருந்தால், சங்கடங்கள் அகலும், நல்வாழ்விற்கு வழிவகைசெய்யும்.அனைத்துவித காரியத் தடங்கல்களும் விலகி, தொடங்கிய அனைத்துத் துறைகளிலும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள் என்பது திண்ணம். மேலும், இன்றைய தினத்தின் மஹா சங்கட ஹர சதுர்த்தியை கடைப்பிடித்தால், ஒருவருட மாதாந்திர சதுர்த்தி விரதங்களனைத்தையும் அனுஷ்டித்த புண்ணிய பலன்கள் அனைத்தும் இந்த ஒருநாள் விரதம் இருந்தாலே போதும், மகத்தான புண்ணியம் உங்களை வந்தடையும்.
ஆவணி 10 (26.8.2024) – திங்கட்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
இன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த மகத்தான புண்ணிய தினம்.
ஆவணி 11 (27.8.2024) – செவ்வாய்க்கிழமை
சூரிய பகவானுக்கும், சாயா (நிழல்) தேவிக்கும் பிறந்தவனும், கருவிழிபோன்றும், நீருண்ட மேகம் கரிய நிறத்துடையோனும், யமதர்ம ராஜனின் சகோதரனும், கிரகங்களில் மெதுவாகச் (மந்தன்) செல்பவனும், நிலுவையிலிருக்கும் வழக்குகளை மேலும் நீட்டித்துத் தருபவனும், மரணத்திற்கான காரணகர்த்தாவாகவும், ஒருவரின் ஜாதகத்தில்,சுப பலமிழந்த நிலையில்,அவர்கள்தம் வாழ்வில், துயரம், வறுமை, தீராத வியாதி, சமுதாயத்தில் கிடைக்கும் அவமரியாதைஇவற்றையெல்லாம் பெற்றுத் தருபவரும், அதே சமயத்தில் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் (உச்சமாகவோ அல்லது ஆட்சிவீடாகவோ, சுப கிரகச் சேர்க்கையாகவோ) பலம்பொருந்தியவராக சஞ்சரிப்பராகின், சர்வ வல்லமை பெற்றவர்களாகவும், சளைக்காத உழைப்பாளர்களாகவும், தனக்கென்று வாழாமல் பிறர்க்கென வாழும் வாழ்க்கையைக் கொண்ட, தன்னலமற்ற தியாகிகளையும் சமூகத்தில் நிைறந்திருக்கச் செய்பவராகவும், நீண்ட ஆயுளைத் தருபவராகவும், பூமிக்குள் புதையுண்டு கிடக்கும் கனிம வளங்களைக் கண்டறிந்து அவற்றைவெளிக்கொணரும் அறிவு பெற்றவர்களாகவும், ஆற்றலுடன் திகழ வைப்பவருமாகிய, சனி பகவானின் ஜெயந்தி! இன்றைய தினம் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து, கருங்குவளை மலர்களால் (இயலாதவர்கள், நீல நிற சங்குப் பூவினால்) அர்ச்சித்து, ஒன்பது மண் அகல் விளக்குகளில் செக்கிலாட்டிய நல்லெண்ணெய் தீபம் ஏற்றி் வழிபட, சனி தோஷ மட்டுமல்லாது, அனைத்து வித தோஷங்களும் விலகிடும், மேலும், இன்று பாஞ்சராத்திர முனித்ரய ஸ்ரீஜெயந்தி. ஸ்ரீ கிருஷ்ண பகவானை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க பதினாறுவகைச் செல்வங்களும் உங்களை வந்தடையும்.
ஆவணி 15 (31.8.2024) சனிக்கிழமை – சனி மகாபிரதோஷம்.
இன்று உபவாசம் இருந்து, மாலையில் திருக்கோயிலுக்குச் சென்று, சனி பகவானையும், நந்திகேசுவரரையும், ஈஸ்வரன் – அம்பிகையையும் தரிசிப்பது அனைத்து பாபங்களையும் நொடியில் போக்கும்.
ஆவணி 17 (2.9.2024) திங்கட்கிழமை – அமாவாசை
பித்ருக்களுக்கு (மறைந்த நமது முன்னோர்களுக்கு) தர்ப்பணம் மூலம் பூஜிப்பது, அளவற்ற நன்மைகளை அளிக்கவல்லது.
ஆவணி 20 (5-9-2024) – வியாழக்கிழமை
பூமாதேவியின் புதல்வனும், “பளிச்”சென்று ஜொலிக்கும் வைரக் கற்களுக்கு நிகரானவரும், மின்னலைப் போன்ற ஒளி பொருந்தியவரும், நெஞ்சுறுதி மற்றும் உடல் உறுதியைத் தந்தருள்பவனும், ஜாதகத்தில் அங்காரக பலம் வாய்ந்தவனாக வீற்றிருப்பதால், வைராக்கியம், பெருந்தன்மை, தொண்டு புரிதல், அன்பிற்கு அடிமையாதல், அதேசமயத்தில் கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டித்தல், பகையை வேறோடு அழித்தல், நம் உடலினுள் பாயும் ரத்தத்திற்கு காரகத்துவம் வாய்ந்தவனும், அனைத்து துறைகளிலும் முதன்மை ஸ்தானத்தை அளித்தருள்பவனும், பூமியின் தென்திசைக் காரகனும், வெற்றிபெறத் தேவையான உபாயங்களாகிய சாம, பேத, தான, தண்டம் – இவற்றில் தண்ட உபாயத்திற்குரியவனுமாகிய செவ்வாய் கிரக ஜெயந்தி. உங்கள் வீட்டிற்கருகாமையில் உள்ள கோயிலுக்குச் சென்று, செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செவ்வரளிப் பூக்களைக் கொண்டு அர்ச்சித்து மூன்று, ஆறு அல்லது ஒன்பது மண் அகல் விளக்குகளில் நாட்டுப் பசு நெய் கொண்டு விளக்கேற்றி வணங்கினால், அனைத்துவித செவ்வாய் தோஷங்களும் விலகி, உங்கள் ஜாதகத்தில் சுப பலம் பெற்று உங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் ஈடேற்றித் தந்திடுவார், அங்காரகன்!
ஆவணி 22 (7.9.2024) சனிக்கிழமை – ஸ்ரீ விநாயக சதுர்த்தி .
தடைகள் அனைத்தையும் தகர்த்தெறியும் விநாயகப் பெருமானின் அவதார தினம். இன்று உபவாசமிருந்து, விநாயகப் பெருமானைப் பூஜிப்பதால், நல்லவாழ்வு கிட்டும்.
ஆவணி 23 (8.9.2024) ஞாயிற்றுக்கிழமை
ரிஷி பஞ்சமி. வேதகால மகரிஷிகளை நன்றியுடன் நினைத்து, பூஜிப்பது மகத்தான புண்ணிய பலனைத் தரும்.
ஆவணி 30 (15.9.2024) ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீ வாமன ஜெயந்தி. மேலும், ஸ்ரீபுவனேஸ்வரி அவதார தினம். ஜாதகத்தில், சந்திரனின் தோஷம் இருப்பின், நிவர்த்தியாகும். மனநோய்களுக்கு அருமருந்தாகும்,ஸ்ரீபுவனேஸ்வரி அன்னையைப் பூஜிப்பது! தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குருவானவரும், ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் புத்தி சக்தியை அளித்தருள்பவனும், பிரஹஸ்பதி, பொன்னன் (பெயரில் மட்டுமே பொன்னன் என்றில்லாமல், இவரது ஆளுகைக்குட்பட்ட லோகம் முழுவதுமே பொன்னால் ஆனது!!), ஆசாரியன், என அழைக்கப் பெறுபவனும், முக்கரணங்களுக்கும், வேதாந்த ஞானத்திற்கும் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுபவராகிய வியாழன், முகவசீகரம் தேஜஸின் மூலம் பிரம்ம ஸ்வரூபிகளை அடையாளம் காட்டுபவனாகவும், சம்பாதித்த திரவியங்களைச் சேமித்துவைக்கத் தூண்டுபவனும், இவரது சுபப் பார்வை, ஒருவரின் ஜாதகத்தில், இளமைக் காலத்தில் ஏற்பட்டால், கல்வி கேள்விகளில் பரிமளிப்பவராகவும் சிறந்து விளங்குபவராகவும், நடுத்தர வயதில் வியாழனின் சுபத்துவப் பார்வை ஏற்பட்டால், சகலவித சௌபாக்கியங்களையும் அடைந்து அவற்றை அனுபவிப்பவராகவும், முதுமைக் காலத்தில் ஏற்பட்டால், சந்ததியினர் செழித்து வளர்வதைத் தன் இரு கண்களால் கண்டுகளிப்பவராகவும் விளங்குவர்.
சகல தேவதைகளும் வசிக்கும் பசுக்கூட்டங்களுக்கும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் முழுமுதற் கடவுளெனப் போற்றப்படுபவராகவும், யாருக்கும், எதற்காகவும் சிரம் தாழ்த்தாதவர்களாகவும், பிறரால் செயற்கரிய செயல்களை புரியக்கூடிய சக்தி புத்தியைத் தந்தருள்பவரும், துர்புத்தியுடையோரை விலக்கி, நல்லோர் சேர்க்கையைக் கூட்டுபவராகவும், நன்னடத்தையாலும்,சுடர்மிகு அறிவொளி மிகுந்தவராகவும், விவேகத்துடன் கூடிய வேகத்தை அளித்து, அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சக்தியை அளிப்பவராகவும், முக்குண தோஷங்களாகிய, வாதம், பித்தம், கபம் இதில் “கபம்”த்தின் ஆளுகைக்குரியவர். விலைமதிக்க முடியான புஷ்பராகக் கல்லுக்கு உரியவர். தனது பார்வை பலத்தினாலேயே மற்ற பிற கிரகங்களுக்கும் சக்தியையும் பலத்தையும் தந்தருள்பவராகவும் உள்ளன “குரு பார்வை கோடி நன்மைகளைத் தரும்…!” என்ற வார்த்தைகளுக்கு உயர்வைத் தரும் குரு பகவானின் ஜெயந்தி! சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம், திருப்பதி மார்க்கத்தில் சுருட்டப்பள்ளி, தஞ்சாவூரில் உள்ள தென்திட்டை, தேனி மாவட்டத்தில் உள்ள வேதபுரி, சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, உசிலம்பட்டியில் திடியன் கைலாசநாதர் கோயிலில், திருச்சியருகேயுள்ள திருக்கரம்பனூர் உத்தமர் கோயிலில், மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோயிலிலும், ஆலங்குடி, மன்னார்குடி, நாச்சியார் கோயில்களிலும், திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலிலும் திருவாரூர் நாகப்பட்டினத்திலுள்ள கீவளர் ஏதாவது ஒரு திருக்கோயிலுக்குச் சென்று இன்றைய தினத்தில், குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் சாமந்தி அல்லது வாசமிகு செண்பகம் அல்லது தேன் சொட்டும் மஞ்சள் இருவாட்சிப் பூவினால் பூஜித்து, ஒன்பது மண் அகல் விளக்குகளில் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றினால் சகலவித சம்பத்துகளும் உங்களை வந்தடைவது உறுதி! தேவை பக்தியும், உறுதியான நம்பிக்கையும் மட்டுமே!!
பகவத் கைங்கர்ய,
ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி
A.M.ராஜகோபாலன்