*சீரமைத்த மின் வாரிய ஊழியர்கள்
ஊட்டி : நீர்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் அதனை மின்வாரிய ஊழியர்கள் மண் மற்றும் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர்.
நடப்பு ஆண்டு கேரளாவில் மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், இதன் தாக்கம் நீலகிரி மாவட்டத்திலும் எதிரொலித்தது. கடந்த மே மாதம் சுமார் ஒரு வார காலம் பெய்த மழை காரணமாக மரங்கள் விழுதல், மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன.
இவை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்தால் சரி செய்யப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளான குந்தா வட்டத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பொழிவு உள்ளது.
பிற பகுதிகளில் அவ்வப்போது மழை குறைந்து காணப்பட்டாலும், அவலாஞ்சி உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே மேகமூட்டத்துடன் நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது.
இதனால் வனத்திற்கு நடுவே செல்லும் அவலாஞ்சி சாலையானது பல இடங்களிலும் குண்டும் குழியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதனால் அவலாஞ்சி மின் நிலையத்திற்கு செல்லும் மின்வாரிய பணியாளர்கள், அரசு பஸ் மற்றும் சூழல் சுற்றுலாவை காண வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மின்வாரிய ஊழியர்கள் வாகனம் மூலம் மண் மற்றும் கற்ளை கொண்டு வந்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மீது கொட்டி அவற்றை தற்காலிகமாக சீரமைத்தனர். இருப்பினும் சாலையை தரமாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.