சென்னை: ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி அடுத்த சேக்காடு அண்ணாநகர் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) சேட்டு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் நந்தம்பாக்கத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் 8க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சேக்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சார் பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் என்பதால் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போது லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்ததால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இரவு 11.55 மணி வரை சோதனை நடந்தது. சார் பதிவாளர் ஒரு பத்திரத்திற்கு சுமார் 3,000 ரூபாய் வரை லஞ்சமாக பெறுவதாகவும், சில பத்திரத்திற்கு கூடுதலாக பெறுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.