சென்னை: மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கி செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில், சிக்னலை கடந்து சென்றது. இதனால் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயில் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விபத்து காரணமாக சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில், தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் கோவை விரைவு ரயில், மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில், திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில், பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் ஆகிவை நிறுத்தப்பட்டன நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதால் மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கி செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.