சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் ரயிலை கவனக்குறைவாக இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அன்னனூர் பணிமனையில் இருந்து 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நேற்று முன்தினம் அதிகாலை 4.45 மணியளவில் ஆவடி நோக்கி சென்றது. அந்த ரயில் ஆவடி ரயில்நிலையத்தை அடையும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இந்து கல்லூரி ரயில் நிலையத்தை தாண்டி சிறிது தூரம் சென்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு மின் கம்பத்தில் மோதி நின்றது. இதனால் ரயிலின் முன் பகுதியில் உள்ள 4 பெட்டிகளும் தடம்புரண்டன. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் டிரைவர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்தது. ரயில் டிரைவர் (லோகோ பைலட்) ரவியிடம் விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்ட நிலையில், அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.