சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் ரயிலை கவனக்குறைவாக இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 14 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகு அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து சீரானது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்துக்கு தினம்தோறும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.அதன்படி, அன்னனூர் பணிமனையில் இருந்து 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தது. எப்போதும் போல, அந்த ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
ஆனால், ஆவடி ரயில்நிலையத்தை அடையும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இந்து கல்லூரி ரயில் நிலையத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தது. இதனையடுத்து ரயில் சிறிது தூரம் சென்ற நிலையில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு மின் கம்பத்தில் மோதி நின்றது. இதனால் ரயிலின் முன் பகுதியில் உள்ள 4 பெட்டிகளும் தடம்புரண்டன. மேலும், இச்சம்பவம் நடைபெறும்போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் எதிரே எந்த ரயிலும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள் ரயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அனைத்து விரைவு ரயில்கள், மின்சார ரயில்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
அதேபோல், சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் அவதிக்குள்ளாகினர். மேலும், தடம்புரண்ட ரயிலை மீட்டு ஆவடி பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 14 மணி நேர மீட்புப்பணிக்கு பின்னர் அந்த தடத்தில் ரயில்கள் சீராக இயங்கத் தொடங்கின. ரயிலின் ஓட்டுனர் அயர்ந்துவிட்டதே விபத்திற்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. லோகோ பைலட் ரவியிடம் விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்ட நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.