Friday, February 23, 2024
Home » ஆவடி 3வது வார்டில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற மக்கள் வலியுறுத்தல்

ஆவடி 3வது வார்டில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற மக்கள் வலியுறுத்தல்

by Arun Kumar

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் பழுதடைந்த ஏராளமான மின்கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, அதற்குள் இருந்த துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே நீட்டியபடி எந்நேரத்திலும் கீழே விழுந்து உயிராபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளன.

இவற்றை அகற்றி சீரமைப்பதில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இக்கம்பங்களை உடனடியாக அகற்றி சீரமைக்க எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆவடி மாநகராட்சி, 3வது வார்டுக்கு உட்பட்ட மிட்டினமல்லி அரசு உயர்நிலைப் பள்ளி தெரு உள்பட பல்வேறு தெருக்களில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஆவடி நகராட்சியாக இருந்தபோது, மின் வினியோகப் பணிக்காக ஏராளமான சிமென்ட் கான்கிரீட் கம்பங்கள் அமைக்கப்பட்டன. நாளடைவில் இந்த மின்கம்பங்களில் மேற்புறம் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து, அதற்குள் பொருத்தப்பட்டு இருந்த துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.

மேலும், இந்த கம்பங்களின் வழியே செல்லும் மின்கம்பிகளும் ஆங்காங்கே பழுதடைந்து துண்டாகி விழுந்ததால் ஒட்டு போடப்பட்டு உள்ளன. 3வது வார்டின் அனைத்து தெருக்களிலும் உள்ள சிமென்ட் மின்கம்பங்கள் எந்நேரத்திலும் முறிந்து விழுந்து அதிகளவிலான உயிராபத்தை ஏற்படுத்தும் அபாயநிலையில் உள்ளன.

இவற்றை அகற்றி, மின் வினியோகத்தை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மின்வாரிய மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் ஏராளமான புகார்கள் அளித்தும், இதுவரை அந்த பழுதான மின்கம்பங்களை அகற்றி, புதிதாக மாற்றி மின் வினியோகத்தை சீரமைப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களினால் யார் யார் பலியாகப் போகிறார்களோ என்ற அச்சத்தில் நடமாடி வருகின்றனர்.

எனவே, இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, 3வது வார்டு உள்பட அனைத்து வார்டு பகுதிகளிலும் பழுதான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி மின் வினியோகத்தை சீரமைக்க எம்எல்ஏ மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரிய மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

four + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi