கொடைக்கானல் : கொடைக்கானலில் அவகோடா பழ மரங்களில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதித்ததுடன், விலையும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு விவசாயிகள் காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் சாகுபடி செய்து வருகின்றனர். கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, புலியூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அவக்கோடா பழங்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் அவகோடா பழங்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக அவகோடா பழ மரங்களில் மர்மநோய் தாக்குதலால் இதன் விளைச்சல் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கடந்த காலங்களில் ஒரு கிலோ ₹250 முதல் ₹300 வரை விற்ற அவகோடா பழங்கள் தற்போது ஒரு கிலோ ₹150 முதல் ₹200 வரையே விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் நோய் தாக்குதலாலும், உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசின் தோட்டக்கலை துறையினர் அவகோடா பழங்கள் பயிரிட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதுடன், அவகோடா விவசாயத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.