பெரம்பூர்: ஆட்டோ ஸ்டாண்டில் மாமூல் கேட்டு தாக்கியதால், தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி ெகாலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். வியாசர்பாடி பி.வி.காலனி 13வது தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (35). இவருக்கு திருமணமாகி விஜி என்ற மனைவி உள்ளார். ஆசைத்தம்பி மீது 2016ம் ஆண்டு ஸ்டாலின் என்பவரை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 17 குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இவர், அதே பகுதி 18வது தெருவில் வசிக்கும் விமலா (50) என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், இவர் விமலா வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 8 பேர், வீட்டிற்குள் புகுந்து ஆசைத்தம்பியை சரமாரியாக தாக்கி, கடப்பா கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பினர். அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த விமலா, சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது, ஆசைத்தம்பி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, ஆசைத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில், புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், உதவி கமிஷனர் வரதராஜன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், வியாசர்பாடி ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆசைத்தம்பி மாமூல் கேட்டு மிரட்டியதுடன், தர மறுத்த டிரைவர்களை அடித்து, தகராறு செய்துள்ளார். சில நேரங்களில் பணம் பறிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்ற ஆசைத்தம்பி மாமூல் கேட்டு, வடிவேல் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவர்களது மனைவிகளையும் தகாத வார்த்தையால் திட்டிவிட்டு சென்றுள்ளார். இதுற்றி அவர்கள் ஸ்டாண்டில் உள்ள சக ஆட்டோ ஓட்டுனர்களிடம் கூறியுள்ளனர். இதில், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 8 பேர், தொடர்ந்து மாமூல் கேட்டு தாக்கி, தொல்லை செய்து வந்த ஆசைத்தம்பியை கொலை செய்ய முடிவு செய்தனர்.
பின்னர், அனைவரும் மது அருந்திவிட்டு, விமலா வீட்டில் ஆசைத்தம்பி இருப்பதை உறுதி செய்தனர். அங்கு சென்று, 5 பேர் உள்ளே சென்று ஆசைத்தம்பியை பீர் பாட்டில் மற்றும் கற்கலால் தாக்கி கொன்றுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வெளியில் பாதுகாப்பிற்கு நின்றுள்ளனர். ஆசைத்தம்பி இறந்ததை உறுதி செய்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, ஏரிக்கரை பகுதியில் ஆட்டோ ஒட்டிவந்த வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த வடிவேல் (38), பாலாஜி (30), ஜெய்சங்கர் (42), பாலமுருகன் (35), அருண்குமார் (37), அருண் (எ) அமாவாசை (35) ஆகிய 6 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முருகன், கார்த்தி ஆகிய இரு ஆட்டோ ஓட்டுநர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* ஏ பிளஸ் ரவுடி
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (31). ஏ பிளஸ் குற்றவாளியான இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 17 குற்ற வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் போலீசார் இவரை தேடி வந்த நிலையில், வியாசர்பாடி பகுதிக்கு இவர் நேற்று வருவதை அறிந்த எம்.கே.பி.நகர் போலீசார், வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து, இவரை கைது செய்தனர். விசாரணையில், இவர், வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதிகளில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் நடத்தனர்.