சென்னை: மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டுமென்று அண்ணா குரல் கொடுத்ததின் முக்கியத்துவம் இப்போதாவது தெரிகிறதா என அமைச்சர் மனோ தங்கராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் நீடித்து வருகிறது. இதனிடையே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் அம்மாநில ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து X தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ்; வாக்களித்த மக்களுக்கு கடமையாற்ற நினைக்கும் மாநில அரசுகளை கைவிலங்கு போட நினைக்கும் ஒன்றிய அரசின் எடுபிடிகளால் ஏற்பட்டிருக்கும் அவலம். தமிழ்நாட்டில் 25, கேரளாவில் 8 மசோதாக்கள் ஆளுநர்களிடத்தில் நிலுவை. 2 மாநில அரசுகளும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டுமென்று அண்ணா குரல் கொடுத்ததின் முக்கியத்துவம் இப்போதாவது தெரிகிறதா?? வெல்லட்டும் திராவிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.