*மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் படிக்கட்டி விபத்தை தடுக்கும் வகையில் தனியார் பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் படிக்கட்டு விபத்துக்களை தடுக்கும் வகையில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதை போன்று, தனியார் பேருந்துகளிலும் கதவு பொருத்தப்படுமா என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஈரோடு அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து, படிக்கட்டில் பயணித்த, பெருந்துறையை சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து, இது போன்ற விபத்துகளை தவிர்க்க, அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், படிகட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட வேண்டும். மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்பகுதி மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொறுத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் அவர்களுக்கு தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் பேருந்து சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பிறகு பேருந்தை இயக்க வேண்டும் என பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு, பல்வேறு அறிவுரைகளை தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பொருத்தியிருந்தன. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழித்தடத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படவில்லை.
இதன் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் லாப நோக்குடன் மட்டுமே செயல்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டு விபத்துக்களை தடுக்கும் வகையில், தானியங்கி கதவுகள் பொருத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில், தானியங்கி கதவு பொருத்தப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. ஆனால், தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பயணத்தால் சாலைகளில் செல்லும் பிற வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த, பேருந்து உரிமையாளர்கள் முன் வரவேண்டும். இதனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.