பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் இரவு நேரங்களில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் அருள் மணிமாறனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் மாலை, வியாசர்பாடி கென்னடி நகர் 1வது தெருவை சேர்ந்த சுரேந்திரன் (24) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், இவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டே, மூலக்கடையை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் கஞ்சா மொத்தமாக வாங்கி, அதனை சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து, வியாசர்பாடி எம்கேபி நகர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.