அம்பத்தூர்: நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் காமேஷ் (25), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு சவாரி முடிந்து, அம்பத்தூர் ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் தனது பிறந்த நாளையொட்டி, நண்பர்களுடன் நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த காமேஷ், வழியை மறித்து கேக் வெட்டிய கவுதம் மற்றும் அவரது நண்பர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், காமேஷிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் காமேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர். காமேஷின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி அவரது சகோதரர் சதீசுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த அவரையும் வெட்டிவிட்டு தப்பினர். இதில், பலத்த காயமடைந்த காமேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், படுகாயமடைந்த சதீஷை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், காமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, ஆவடி காவல் இணை ஆணையர் விஜயக்குமார் அறிவுறுத்தலின்படி, செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் அம்பத்தூர் பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கவுதம் (22), கதிரேசன் (19), சூரியா (23), அஜய் (22), ரியாஸ் (19), நவீன் குமார் (18) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும், இவர்கள் காமேஷை வெட்டி கொன்றதும் தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். பின்னர், சிறுவர்களை திருவள்ளூர் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும், மற்றவர்களை சிறையிலும் அடைத்தனர்.