சென்னை: தமிழ்நாட்டில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசாணைப்படி ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜரானார்.
அப்போது அவர் பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஆட்டோ கட்டணம் குறித்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுத்து 12 வாரத்திற்குள் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். மேலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.