வேளச்சேரி: சித்தாலப்பாக்கம், வினோபா நகரை சேர்ந்தவர் மாலினி (56). இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாலினி தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 9ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, அதேபகுதியில் குடியிருக்கும் தனது 2வது மகள் வீட்டிற்கு சென்று தங்கினார்.இந்நிலையில், கடந்த 28ம் தேதி மாலினி வீட்டின் பீரோவில் இருந்த 104 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கைரேகை நிபுனர்களுடன் சென்று தடையங்களை சேகரித்தனர்.
மேலும் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சித்தாலப்பாக்கம் கன்னிக்கோயில் தெருவில் உள்ள ஆட்டோ டிரைவர் ஆரோக்கியராஜ் (45), என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 104 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். அவர் மீது 2022ம் ஆண்டு ஒரு கஞ்சா விற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.