சென்னை: சென்னை மாதவரத்தில் ஆட்டோவில் சென்று வழிப்பறி செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாதவரம், உள்வட்ட சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பர்ஜாபதி (20). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2-ம் தேதி இரவு பணி முடித்து மாதவரம், உள்வட்ட சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் ராஜுவிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி அவரிடமிருந்து செல்போனைபறித்துக் கொண்டு தப்பியது.
தாக்குதலில் காயமடைந்த ராஜு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை முடிந்த பின்னர் இதுகுறித்து மாதவரம் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமரா அடிப்படையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக கொடுங்கையூரை சேர்ந்த புஷ்பராஜ் (25), அதே பகுதி ஸ்ரீநாத் (19), ஹரி (19), பிரகாஷ் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 17 வயது சிறுவனும் பிடிபட்டார். அவர்களிடமிருந்து 5 செல்போன் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.