பொள்ளாச்சி : பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்று புதைத்த வழக்கில் பெண் டாக்டர் உள்பட 5 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.கோவை அருகே சோமனூரை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் வருண்காந்த் (22). ஆட்டிசம் எனும் மனநலம் குன்றிய வாலிபர். இவரை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த காப்பகத்தை, பொள்ளாச்சியை சேர்ந்த சாஜு, கிரிராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி காப்பகத்தில் வருண்காந்தை கட்டையால் அடித்துக்கொன்று நடுப்புணி அருகே பி.நாகூரில் உள்ள காப்பக நிர்வாகி டாக்டர் கவிதா என்பவரது தோட்டத்தில் சாணம் அடைத்த பாலித்தின் பையில் அடைத்து குழிதோண்டி புதைத்து மேல் பகுதியில் செடி நட்டு வைத்தனர். போலீசாரை குழப்ப இதே இடத்தில் 6 குழிகளை வெட்டினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக பாதுகாப்பாளர் ரித்தீஷ் (26), நிர்வாகி கிரிராம் (36), ஊழியர் ரங்கநாயகி (32), செந்தில்பாபு (55) ஆகியோரை கைது செய்தனர்.
வருண்காந்த் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக உள்ள டாக்டர் கவிதா, சாஜு உள்பட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க பன்னாட்டு விமான நிலையம், துறைமுகங்களில் லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.