*பொதுமக்கள் வேண்டுகோள்
திருப்புவனம் : திருப்புவனம் அருகே அச்சங்குளம் ஊராட்சியை சேர்ந்தது வல்லாரேந்தல். இந்த ஊரில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிருதமால் நதிக்கரையில் அமைந்துள்ள வல்லாரேந்தல் மக்கள் குடிதண்ணீருக்காக 1 கி.மீ தூரம் சென்று தள்ளுவண்டி, சைக்கிள், தலை சுமையாக தண்ணீர் சுமந்து வரும் அவல நிலை உள்ளது. வல்லாரேந்தல் பஸ் ஸ்டாப் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊருக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஆழ்துளை மோட்டார் பழுதாகி விட்டதால், தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியின் ஆழ்துளை கிணறும் பல ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது.
குடிதண்ணீருக்கு மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கும் தண்ணீருக்காக அலைந்து வருகின்றனர். வல்லாரேந்தலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள ஓடாத்தூர் ஊராட்சி எல்லையில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு போடப்பட்ட சிறு மின் விசை தண்ணீர் தொட்டி குழாயில் தள்ளு வண்டியில் ஐந்தாறு குடங்களில் வைத்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
ஒரு சிலர் வல்லாரேந்தல் மயானத்தில் உள்ள குளியல் தொட்டியில் பெண்களும், ஆண்களும் தண்ணீர் பிடித்து சுமந்து செல்லும் பரிதாப நிலையில் அல்லல் பட்டு வருகின்றனர்.
இது குறித்து வல்லாரேந்தல் ஈஸ்வரன் கூறுகையில், வல்லாரேந்தலுக்கு தண்ணீர் வழங்க ஆழ்துளை கிணற்றில் உள்ள நீர்மூழ்கி மோட்டார் பழுதாகி விட்டது.
கடந்த ஒரு வாரமாக தண்ணீருக்காக ஒரு கிமீ தூரம் தள்ளு வண்டி,சைக்கிள்களில் தண்ணீர் சுமந்து செல்கின்றோம். ஊருக்குள் இருக்கும் தண்ணீர் தொட்டியின் ஆழ்துளை கிணற்றை சரி செய்தாலும் போதுமான தண்ணீர் கிடைக்கும். தண்ணீருக்காக அலையும் எங்கள் கஷ்டத்தை அதிகாரிகள் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.