சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தின விழா நேற்று வண்டலூரில் உள்ள பி.எஸ் அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழக முதல்வர் ஆசிரியர்களிடத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்த மாணவ – மாணவிகள் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் உயர் பதவி வகித்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் படித்து வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வெளிநாடுக்கு செல்லும் செலவையும் அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்ற உயர்வுகளுக்கெல்லாம் ஆசிரியர்களே காரணம்.
மேலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி பரிசீலித்து வருகிறார். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், எழிலரசன், சுந்தர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றசங்க மாநிலதலைவர் கு.தியாகராஜன், திருக்கழுக்குன்றம் ஒன்றியகுழு தலைவர் ஆர்.டி. அரசு, மாவட்ட ஊராட்சிக குழுதலைவர் செம்பருத்தி துர்கேஷ், துணைத்தலைவர் காயத்திரி அன்புச்செழியன், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* 386 பேருக்கு நல்லாசிரியர் விருது
மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கமும், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கான, இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல் 29 வரை நடைபெற்றது. இதில் எமிஸ் தளம் வழியாக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், தகுதியான 386 ஆசிரியர்கள் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, 342 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என்று மொத்தம் 386 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.