விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 390 மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்காக ஒரு தலைமை ஆசிரியர், 11 ஆசிரியர்கள் உள்ளனர். தலைமை ஆசிரியராக அந்தோணி ராஜ் உள்ளார். பணியில் சேர்ந்த நாள் முதல் தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜூக்கும், ஒரு சில ஆசிரியர்களுக்கும் கல்வி தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட கல்வித்துறைக்கு தலைமை ஆசிரியர் குறித்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இதில், கல்வித்துறை உத்தரவுக்கு கீழ் படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது, ஆசிரியர்களுடன் மோதல் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டதால் தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜை, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.