சென்னை: இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின்படியே திருக்கோயில்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, புளியந்தோப்பு பகுதியில் இன்று நடைபெற்ற “அன்னம் தரும் அமுத கரங்கள்” நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
முதலமைச்சர் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 20 அன்று எங்கள் அண்ணியார் அவர்களால் கொளத்தூரில் தொடங்கி வைக்கப்பட்ட அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியானது 141 வது நாளாக இன்று காலை 1,200 மக்களுக்கு காலை சிற்றுண்டியை வழங்கியிருக்கின்றோம். ஆண்டு முழுவதும் அமுத கரங்கள் என்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம் தினந்தோறும் காலை சிற்றுண்டி வழங்கி மக்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறோம்.
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களுக்கு இறை பசியோடு வருகின்ற பக்தர்களின் வயிற்றுப் பசியையும் தீர்க்கின்ற அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் திருகோயில்கள் சார்பில் 13 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும், 30 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3.5 கோடி பக்தர்கள் பயன்பெறுவதோடு, இதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.120 கோடி செலவிடப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் இப்படிப்பட்ட அன்னதானத் திட்டங்கள் எங்கும் பரந்து விரிந்து செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கலவல செட்டி சாரிட்டீஸ் மூலம் நூறாண்டுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாமல் திருக்கோயிலுக்கு ஒப்படைத்த நிலையில், அங்கு கல்வி பயின்ற மாணவ, மாணவியரின் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அப்பள்ளியை இந்து சமய அறநிலைத்துறையை ஏற்று தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற உத்தரவிட்டு, அந்த பள்ளிக்கு சுமார் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார். அந்த வகையில் மூடுகின்ற நிலையிலே இருந்த பள்ளிக்கூடத்திற்கு உயிர் கொடுத்து ஆயிரம் மாணவச் செல்வங்கள் படிப்பதற்கு காரணமாக இருந்த எங்கள் முதலமைச்சர் அவர்களை கல்வியின் தந்தை என்று அழைத்தால் அது மிகையாகாது.
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 22450 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.132 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கலையரங்கங்களை அமைத்து தந்திருக்கிறோம். இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்து இருந்தோம். அதில் பல்வேறு வழக்குகள் மற்றும் தடைகளை மீறி நீதிமன்றத்தின் நெடிய போராட்டத்திற்கு பிறகு 4 கல்லூரிகளை தொடங்கினோம்.
அந்த நான்கு கல்லூரிகளிலும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்ற குடும்பங்களை சேர்ந்த 2500 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றார்கள். மேலும் எங்கள் தொகுதியிலும் கல்லூரிகள் வேண்டுமென்று பல சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் நேற்றைக்கு முன்தினம் அதிமேதாவித்தனமாக எதிர்கட்சித் தலைவர் இந்த ஆட்சியில் கலைக் கல்லூரிகளை அரசின் சார்பிலே துவங்கப்பட வேண்டியது தானே என்று அரிய பல சொற்களை, சரித்திரத்தில் இடம் பெறுகின்ற அளவிற்கான சொற்களை உதிர்த்திருக்கின்றார். இந்த ஆட்சியில் அரசின் சார்பில் 41 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கியிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து சமய அறநிலையத் துறையின் அறப்பணியே என்னவென்றால் பசிப்பிணி போக்கும் அன்னதானம் முதல் பணி. அதனை முழுமையாக இந்த ஆட்சியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்த பணி அறியாமை பிணியை நீக்கும் கல்விப் பணி. அந்த கல்விப் பணியையும் இந்த ஆட்சி செம்மையோடும் சிறப்போடும் நடத்திக் கொண்டிருக்கிறது. மூன்றாவதாக உடற்பிணி நீக்கும் மருத்துவம் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் 19 திருக்கோயில்களில் மருத்துவ மையத்தை கொண்டு வந்திருக்கின்றோம். பசிப்பிணி, அறியாமைபிணி, உடற்பிணி இந்த மூன்றும் ஒருசேர நீக்குவது தான் இறைவனுடைய அம்சமாகும். கல்விக்கு சரஸ்வதி, மருத்துவத்திற்கு மருந்தீஸ்வரர், வைத்தீஸ்வரன் என இறை பெயராலேயே இந்த பணிகளை செய்ய வேண்டும் என்று அன்றைக்கே இறைவன் ஆணையிட்டு இருக்கின்றான். அந்த வகையில் இறைவன் கட்டளையையும் மக்கள் கட்டளையையும் ஒருசேர நிறைவேற்றுகின்ற மகத்தான ஆட்சியாக முதலமைச்சர் தலைமையில் செயலாற்றி வருகிறது.
1960 ஆம் ஆண்டு மத்திய அரசால் அன்றைய சென்னை மாகாண அட்வகேட் ஜெனரல் சி.பி. ராமசாமி தலைமையில் ஓய்வு பெற்ற அலகாபாத், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாட்னா அட்வகேட் ஜெனரல் போன்றவர்களை கொண்டு இந்து சமய அற கொடைகள் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த குழு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அளித்த அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கல்வி நிலையங்களை தோற்றுவிக்க வேண்டும் பரிந்துரைத்தனர், சோழர் காலத்திலே கூட மிகப் பெரிய கல்விச்சாலைகள் இருந்ததாகவும், அதில் 11 பாட பிரிவுகள் இடம் பெற்றிருந்ததாகவும், அரக்கோணம் அருகில் உள்ள வீரராஜேந்திரன் காலத்தில் திருமுக்கூடல் திருக்கோயில் வளாகத்தில் கல்விச்சாலையும் மருத்துவச்சாலையும் ஒருசேர இயங்கி வந்திருக்கின்றது என திருக்கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இப்படி வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வி நிலையங்களையும் மருத்துவ நிலையங்களையும் மன்னர் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டு இருந்தது என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகள் இருக்கின்றன. சமணப்பள்ளிகளில் தான் அந்த காலத்தில் கல்வி கற்றுத் தரப்பட்டு இருந்தது அதன் காரணமாகவே பள்ளி என்ற சொல் கல்விக் கூடத்திற்கான சொல்லாக நிரந்தரமாக அமைந்து விட்டது. இந்து சமய அறநிலைத்துறை கொடைகள் சட்டம் பிரிவு 36ன் படியும், பிரிவு 66(i) (f) படியும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தொடங்கலாம். இதில் தத்துவம், கோயில் கட்டிடக்கலை போன்ற பாடங்களுடன் கூடிய பட்டப் படிப்புகளை தொடங்குவதற்கு சட்டம் அனுமதி அளிக்கிறது. அந்த வகையில் தான் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நான்கு புதிய கல்லூரிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி இருக்கின்றார்கள்.
அதுபோலவே, ஆந்திர மாநிலத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் 7 கல்லூரிகள், 4 பள்ளிகளை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் குருவாயூர் திருக்கோயில் நிதியின் மூலம் 3 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த ஆட்சியின் மீது வேறு எந்த அவதூறும் கற்பிக்க முடியவில்லை என்பதற்காகவும் புதிதாக சேர்ந்திருக்கின்ற சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும் நேற்றைய முன்தினம் நம்முடைய எதிர்கட்சித் தலைவர் அவர்கள் பல பொன்னான வார்த்தைகளை உதித்திருக்கின்றார்.
அவரை நான் கேட்டுக் கொள்ள விரும்புவதெல்லாம் நேற்றைக்கு முன்தினம் அவர் கோயம்புத்தூரில் பேசுகின்றபோது அவர் அருகிலிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் அவர்கள் தனது தொகுதியை சேர்ந்த மருதமலையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அதன்படி, மானியக் கோரிக்கை அறிவிப்பில் மருதமலை திருக்கோயிலின் சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். மேலும், அவர்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், சமீபத்தில் மறைந்த அமுல் கந்தசாமி போன்றோர்களும் கல்லூரி அமைத்திட வேண்டுமெனவும், உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து அவர்களும், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் அவர்களும், இதர திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். இப்படி கோரிக்கை வைக்காத சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
இது மாத்திரம் அல்ல கல்லூரிகள் எப்படி கோவில் நிதியிலே நடத்தலாம் என்று கேட்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அவருடைய தலைவர் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்களும் கூட 2015 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் அருள்மிகு பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரி, அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாடு கல்லூரி, குற்றாலம் பராசக்தி கல்லூரி, கன்னியாகுமரி அருள்மிகு தேவி குமாரி அம்மன் கல்லூரி ஆகிய இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் ரூ.28.64 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டங்களையும், கலையரங்கம், உணவுக்கூடம், சமயலறை, சுகாதார வளாகங்களையும் திறந்து வைத்துள்ளனர். மேலும், 11.08.2005 அன்று அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி.சி. ராமசாமி அவர்கள் ரூ.10 இலட்சம் மதிப்பில் இந்து சமய அறநிலையத்துறை பூம்புகார் கல்லூரியில் கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார். இப்படி எண்ணற்ற திறப்பு விழாக்கள் அவர்கள் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றிருக்கின்றன.
சி.பி. ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறக் கொடைகள் கமிஷன் பரிந்துரையின்படி, முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், பக்தவச்சலம், முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். போன்றவர்களால் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 1963 ஆம் ஆண்டு பழனி கல்லூரியையும், 1964 இல் குற்றாலம் பராசக்தி கல்லூரி மற்றும் பூம்புகார் கல்லூரியையும், 1965 ஆம் ஆண்டு குழித்துறை அருள்மிகு தேவி மகளிர் கல்லூரியையும் முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களும் தொடங்கி வைத்துள்ளார். 1969 முதல் 1976 வரையிலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திருக்கோயில்கள் சார்பில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பழனியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்கள் பழனி பாலிடெக்னிக் கல்லூரிகளை இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றி அமைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் இப்படிப்பட்ட வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கின்ற சங்கிகள் எந்த கோரிக்கை வைக்கின்றார்களோ, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து திருக்கோயிலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் வைக்கின்ற கோரிக்கைகளை இவரும் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக இருந்து நேற்றைக்கு முன்தினம் கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்பரைக் கூட்டத்திலே பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கல்வி என்பது மக்களுக்கு இன்றியமையாதது ஒருவரின் வாழ்க்கை பாதையை மாற்றுவது கல்வியே. அந்த கல்வியை வேண்டாம் என்று சொல்கிறவர் எப்படிப்பட்ட கல்நெஞ்சதாரராக இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட நான்கு கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் பெருமைக்கு சான்றாக இருப்பதால், இதுபோன்ற தொடர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் திட்டமிட்டு தமிழகத்திலே இந்த விஷ விதைகளை பரப்பி வருகின்றார். இதை ஒருநாளும் எடுபடாது, மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள், தகுந்த பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பரிசாக அளிப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவர் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை உடைய வருமானத்தை எடுத்து கல்லூரிக்கு கூடுதல் கட்டிடங்களை கட்டி திறந்து இருக்கின்றார். அவருடைய கட்சியின் தலைவர்கள் திறந்து இருக்கின்றனர். அப்படி என்றால் அவர்கள் செய்ததெல்லாம் சதி செயல் என்று சொல்ல வருகின்றாரா? அவருடைய கட்சியின் வழித்தோன்றல், நிறுவனர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்பதை இவருடைய வார்த்தைகளில் இருந்தே தெரிய வருகிறது. அவருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை நான் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றாரோ அதுபோல் யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்து விட்டு வருகிறார். அப்படி நாங்கள் கல்லூரிகளை தொடங்கியதெல்லாம் சதி செயல் என்றால் இதற்கு என்ன பெயரிடப் போகிறார் என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக பாரதிய ஜனதா என்ற மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கின்றது. அது சங்கீகள் கூட்டமாக மாறிக்கொண்டே இருக்கின்றது. காலத்தால் அந்த கட்சி கரைந்து விடும். 2026க்கு பிறகு அந்த கட்சியை தேடுகின்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில அமையும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் ஆட்சிக் காலத்தில் ஹெச்.சி.எல் நிறுவனம் 200 கோடி ரூபாய் செலவில் திருச்செந்தூரில் திருப்பணிகளை தொடங்க வேண்டும் என்று அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றால் அந்த பணிகளை பொதுப்பணித்துறையின் சார்பில் தான் நாங்கள் மேற்கொள்ளுவோம் என்று கூறியுள்ளனர். அதற்கு ஹெச்.சி.எல் நிறுவனம் உடன்படவில்லை. அதில் உள்ளிருக்கின்ற சூட்சமமே, பொதுப்பணித்துறையின் மூலம் பணிகளை மேற்கொண்டால் அதில் கிடைப்பது கிடைக்கும் என்பதால் இந்த தடையை ஏற்படுத்தினார்கள்.
இந்த ஆட்சி வந்த பிறகுதான் ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கு திருச்செந்தூர் திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள உடனடியாக அனுமதி அளித்ததோடு, அந்த நிறுவனமே கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி தந்து திறம்பட செயலாற்றுகின்ற ஒளியுமறைவின்றி செயலாற்றுகின்ற ஒரு அரசு இந்த அரசு என்பதை நிரூபித்து இருக்கின்றோம். அதிமுக ஆட்சி காலத்தில் திறந்து வைத்த அனைத்து கல்லூரிகளின் கட்டிடங்களும் இந்து சமய அறநிலைத்துறையின் உடைய திருக்கோயில் வருமானத்தில் தான் கட்டப்பட்டது, அரசு நிதி அல்ல என்பதை நான் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன். அறியாமையில் இருக்கின்ற எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு இவை எல்லாம் தெரிவதற்கு நியாயமே இல்லை. அவரை புரமோட் செய்வதற்காக சங்கிகள் கூட்டம் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்து இருக்கின்றார்.
வல்லக்கோட்டை திருக்கோயில் குடமுழுக்கில் நடைபெற்ற நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களிடம் பேசிவிட்டோம். அவரும் இந்த நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி என்று சொல்லிவிட்டார். ஆகவே நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். இதுபோன்ற சிறிய பிரச்சனைகள் கூட இனி வருகின்ற குடமுழுக்குகளில் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். இது துறையினுடைய கடமையாகும். கடந்த காலங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் இடங்களை கவனித்து பாருங்கள். கன்னியாகுமரி மாவட்டம் – குழித்துறை, தொன்காசி மாவட்டம்-குற்றாலம், மயிலாடுதுறை மாவட்டம்-பூம்புகார் போன்றவை அந்த காலத்தில் ரிமோட் ஏரியாக்களாக இருந்தவை. அங்கே படிப்பதற்கு வசதி இல்லாத ஒரு சூழல். அந்தப் பகுதிகளில்தான் பெண்களுக்கான கலைக் கல்லூரிகளை தொடங்குகிறார்கள்.
இதன் நோக்கமே பெண்களின் உயர்வுக்காக பாரதியார், பாரதிதாசன் போன்றோர் கண்ட கனவுகளை நம்முடைய முன்னோர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே, திராவிட இயக்கத்தினுடைய தந்தையாக விளங்கிய சர்.பி.டி. தியாகராஜன் போன்றவர்கள் அந்த காலங்களிலே இப்படி பள்ளி கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றார்கள். ஆக இப்படிப்பட்ட ஒரு நல்ல சூழல் உருவாக்குகின்ற இந்த கல்வி நிலையங்கள் மீது அவதூறு கற்பிக்கின்ற எடப்பாடி அவர்களுக்கு நிச்சயமாக 2026 சட்டமன்றத் தேர்தல் பதில் சொல்லும்.
தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் என்னை நேரில் சந்திக்கும்போதெல்லாம் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை அனைத்தும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் அண்ணா என்று தெரிவித்தார்கள். முகத்துக்கு முகம் நேரில் பார்க்கின்ற போது ஒரு பேச்சு, முதுகுக்கு பின்னால் ஒரு பேச்சு பேசுகின்ற பழக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு வருகின்ற கூட்டம் கூடி கலைகின்ற கூட்டம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கூடுகின்ற கூட்டம் கொள்கை கூட்டம். அண்ணாமலையை இரண்டு முறை இந்த இயக்கம் மண்ணை கவ்வ வைத்திருக்கிறது. அவர் தலைமையில் கட்சி இருந்தபோது தான் 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் வென்று காட்டிய தலைவர் எங்களுடைய தலைவர். ஒரு அண்ணாமலை அல்ல, ஒரு எடப்பாடி பழனிசாமி அல்ல, நூறு அண்ணாமலைகள், நூறு எடப்பாடி பழனிசாமிகள் வந்தாலும் இந்த இயக்கம் கட்டுக்குலையாத, கட்டமைப்பு வலுவாக இருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை ஆட்டிப் பார்க்கவோ, அசைத்துப் பார்க்கவோ இனி ஒரு பிறந்து தான் வரவேண்டும் என்று தெரிவித்தார்.