காரைக்கால்: காரைக்கால அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. சுவாமி மீது மாம்பழங்களை வாரி இறைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். காரைக்கால் அம்மையாரான புனிதவதி வீட்டுக்கு மதிய வேளையில் சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் வந்து உண்பதற்கு அன்னம் கேட்டார். புனிதவதியும் அன்னத்துடன் தனது கணவர் பரமதத்தர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 2 மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்கு கொடுத்தார்.
வீடு திரும்பிய பரமதத்தர் தான் வாங்கி வைத்திருந்த 2 மாங்கனிகளில் ஒன்றை வாங்கி சாப்பிட்டார். மாங்கனி இனிக்கவே மீதியிருந்த ஒரு மாங்கனியை சாப்பிட எடுத்து வருமாறு புனிதவதியிடம் கேட்டார். இதை கேட்ட புனிதவதி திகைத்து நின்று இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் ஒரு மாங்கனி கிடைத்தது. இந்த மாங்கனியை சுவைத்த பரமதத்தருக்கு ஏற்கனவே சாப்பிட்ட மாங்கனியை விட அமைப்பும், சுவையும் மிகவும் மாறுபட்டதால் இதுகுறித்து புனிதவதியிடம் கேட்டார். புனிதவதியார் இறைவனின் திருவிளையாடலை எடுத்துரைத்தார். இதை நம்ப மறுத்த பரமதத்தர் மீண்டும் மாங்கனியை இறைவனிடமிருந்து வரவழைத்து தருமாறு கேட்டார். புனிதவதியும் அவ்வாறே சிவபெருமானை மனதார நினைத்து வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியை பெற்றதால் பரமதத்தர் மனதில் பயம் கொண்டார். இறையருள் வாய்ந்த புனிதவதியை கண்டு பயந்து அவரை விட்டு விலகினார்.
கணவன் தன்னை ஒதுக்கிய பிறகு இந்த மனித உடல் இனி எதற்கு என இறைவனை வேண்டி பேய் உடல் பெற்றார். பின் பேயுடலுடன் கையிலைக்கு சென்று சிவபெருமானிடம் சரணடைந்தார் என்பது புராணம். இதை நினைவுபடுத்தும் வகையில் காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி கைலாசநாதர் கோயிலில் இந்தாண்டு மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை புனிதவதியார்- பரமதத்தருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு பிச்சாண்டவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் துவங்கி இன்று காலை வரை நடந்தது. பின்னர் நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொலிக்க மேளதாளம் முழங்க பவளக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதியுலா சென்றார். பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.
அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளின் மாடிகளில் இருந்து பக்தர்கள், மாங்கனிகளை இறைத்து தரிசனம் செய்தனர். இந்த மாங்கனிகளை பக்தர்கள் பிடித்து வீடுகளுக்கு எடுத்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகளான மாதா கோயில் வீதி, லெமர் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி வழியாக சிவபெருமான் சாமி உலா நடந்தது. இன்றிரவு காரைக்கால் அம்மையார் கோயில் நிலையை தேர் அடையும். இதைதொடர்ந்து கைலாசநாதர் கோயில் மணிமண்டபத்தில் காரைக்கால் அம்மையார் எதிர் சென்று பிச்சாண்டவரை அழைத்து அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.