வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் இயற்கை கால நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வால்பாறை பகுதியில் கடந்த சில வாரமாக தென்மேற்கு பருவ மழை பெய்து வந்ததால், பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது.
ஆங்காங்கே வறண்டு போன அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. அவ்வப்போது லேசான சாரல், சில இடங்களில் மிதமான மூடுபனி, சில இடங்களில் எதிரே வருபவர் தெரியாத அளவுக்கு மூடு பனி என அசத்தலான கால நிலை நீடிப்பதால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் சோலையார் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. பல பகுதிகள் தீவுகள் போல உள்ளது. இந்நிலையில் சோலையார் அணை பகுதி தற்போது சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக மாறி உள்ளது.