சேலம்: தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கல்வி மருத்துவ பயிற்சியின்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த குறைகளை பெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் அதிகப்படியான கட்டணம் வசூலித்தல் உதவித்தொகை செலுத்துவதில் தாமதம் அல்லது உதவித்தொகை செலுத்தாதது ராகிங் பயிற்சி தொடர்பான பிரச்னைகள் பேராசிரியர்கள் அல்லது கல்லூரி ஊழியர்கள் தொடர்பான பிரச்னைகள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்னை பாடத்திட்டம் வருகை கற்பித்தல் தேர்வு மதிப்பீடு உள்ளிட்ட குறைகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் குறைகளை சரிசெய்ய 3 நிலைகளைக்கொண்ட குறைதீர்க்கும் மையங்களை என்.எம்.சி. ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ராகவ்லங்கர் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரும்பாலான பிரச்னைகள் கல்லூரி அல்லது பல்கலைக்கழக அளவிலேயே தீர்க்க முடியும். அவ்வாறு பிரச்னைகள் தீர்க்காத போது சம்மந்தப்பட்ட மாநிலத்தின் மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் மூலம் சரிசெய்ய முடியும். பிரச்னைகள் பெரிய அளவில் இருக்கும்போது என்.எம்.சி.க்கு மேல்முறையீடு செய்யலாம்.மருத்துவக்கல்லூரி நிர்வாகம் பல்கலைக்கழகம் மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் என மூன்று நிலைகளில் குறைகளை தீர்க்க கட்டமைக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகளை கொண்டு குறைதீர்க்கும் குழுக்களை அமைக்க பரிந்துரை செய்யப்படுகிறது. கல்லூரி பல்கலைக்கழகங்கள் மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் குறைதீர்க்கும் குழுக்களின் விவரங்களை இணையதளத்தில் வழங்கும். மேலும் மாணவர்கள் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட குறைகள் மற்றும் குறைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை அனைத்தையும் தொடர்ச்சியாக பராமரிக்கும். கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகங்கள் இதற்காக வெப் போர்ட்டலை உருவாக்கி காட்சிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் குறைகளை ஆன்லைன் முறையில் பதிவு செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் குறைகளை விரைவாகவும் திறம்படவும் சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீர்க்கப்படாத பிரச்னைகளை என்எம்சியில் மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.