சிட்னி: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செர்பியர் வீரர் ஜோகோவிச் தன் முதல் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் பசவரெட்டியை எதிர்கொள்கிறார். இந்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், நாளை, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் துவங்குகிறது. இந்த போட்டிகள் வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளன. இந்த போட்டிகளில் யார், யாருடன் மோதுவது என்பதை தெரிவு செய்யும் நடைமுறை நேற்று முடிந்தது. இதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியை சேர்ந்தவரும் நடப்பு சாம்பியனுமான ஜேனிக் சின்னர், தரவரிசையில் 34வது இடம் வகிக்கும் சிலி நாட்டு வீரர் நிகோலஸ் ஜாரியுடன் முதல் சுற்றில் மோதுகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரரான பசவரெட்டி, வைல்டு கார்டு மூலம் முதல் சுற்றில் களமிறங்குகிறார். அவர், 10 முறை சாம்பியன் பட்டம் பெற்றவரும், உலக தர வரிசையில் 7ம் இடத்தில் உள்ளவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 2ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், பிரான்சின் லுாகாஸ் போய்லியுடன் மோதுவார். உலகின் 3ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்ஸெங்கோவுடன் களம் காணுவார். உலகின் 4ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெல்யர் பிரிட்ஸ், சக நாட்டு வீரர் ஜேன்சன் புரூக்ஸ்பியை எதிர்கொள்வார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் உலகின் நம்பர் 1 வீராங்கனையுமான அரைனா சபலென்கா, முதல் சுற்றில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோதவுள்ளார். அதேபோல், அமெரிக்க ஒபன் டென்னிஸ் முன்னாள் சாம்பியனும், உலக தர வரிசையில் 3ம் இடத்தில் உள்ளவருமான அமெரிக்க வீராங்கனை கோகோ காப், சக அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினுடன் மோதவுள்ளார். போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், செக் வீராங்கனை கேத்ரினா சினியகோவாவை எதிர்கொள்ள உள்ளார்.