போட்செஃப்ஸ்ட்ரூம்: தென்ஆப்ரிக்கா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன் குவித்தது. அதிகபட்சமாக மார்க்ரம் நாட் அவுட்டாக 102 (74 பந்து, 9 பவுண்டரி,4 சிக்சர்), டிகாக் 82 (77பந்து,10பவுண்டரி, 2சிக்சர்) கேப்டன் பவுமா 57, ரீசா ஹென்ட்ரிக்ஸ் 39 ரன் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 78 (56 பந்து, 10 பவுண்டரி,3 சிக்சர்) டிராவிட்ஹெட் 38, கேப்டன் மிட்செல் மார்ஷ் 29 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆவுட் ஆகினர். 34.3 ஓவரில் 227 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது. இதனால் 111 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்றது. அந்தஅணியின் பவுலிங்கில் ஜெரால்ட் கோட்ஸி 4, மகராஜ், தப்ரைஸ் ஷம்சி தலா 2விக்கெட் எடுத்தனர். மார்க்ரம் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2-1 என தொடர் உள்ள நிலையில் 4வது போட்டி செஞ்சூரியனில் வரும் 15ம்தேதி நடக்கிறது.