கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் போர் பயிற்சியின் போது அமெரிக்க கடற்படை விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தின் அருகில் மல்விலே என்ற தீவு உள்ளது. தீவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், கிழக்கு தைமூர் நாடுகளின் ராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,நேற்று காலை பயிற்சியில் ஈடுட்டிருந்த அமெரிக்க கடற்படை விமானம் மெல்விலே தீவில் நொறுங்கி விழுந்தது.
இதில், 3 வீரர்கள் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், வி-22 ஆஸ்பிரே ரக விமானம் விழுந்து நொறுங்கியது.சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடக்கிறது. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது என தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண முதல்வர் நடாஷா பைல்ஸ் கூறுகையில்,‘‘ விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் டார்வின் நகரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது’’ என்றார்.