லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று தொடங்குகிறது. அதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்காவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. குறுகிய ஓவர் போட்டிகளான ஒருநாள், டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை போட்டிகள் நடத்துவது போல் பாரம்பரிய கிரிக்கெட் போட்டியான டெஸ்ட் போட்டிகளுக்கான உலக கோப்பை போட்டி, முதல் முறையாக, 2021ல் நடந்தது. 2 ஆண்டுகள் ஒவ்வொரு அணியும் வழக்கமாக விளையாடும் டெஸ்ட் ஆட்டங்களில் அதிக வெற்றிகளை பெற்ற முதல் 2 அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.
2வது உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2023ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2023- 2025 ஆகிய 2 ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் ஆட்டங்களுக்கான, 3வது டெஸ்ட் சாம்பியன் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று லண்டனில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் அரங்கில் தொடங்குகிறது. இதற்கான லீக் ஆட்டங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தன. அதில் ஐசிசியின் நிரந்தர உறுப்பினராக உள்ள 9 நாடுகள் பங்கேற்றன. அதில் தென் ஆப்ரிக்கா 69.44 வெற்றிப் புள்ளிகளுடன் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்தது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 67.54 வெற்றிப் புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது.
எனவே முதல் 2 இடங்களை பிடித்த இந்த அணிகளும் முதல் முறையாக பைனலில் சந்திக்க உள்ளன. தொடர்ந்து 2 முறை முதல் இடத்தை பிடித்த இந்தியா, 50 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தது. அதனால் ஹாட்ரிக் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு, ரூ.31.81 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு, ரூ. 18.48 கோடியும், 3ம் இடம் பிடித்துள்ள இந்திய அணிக்கு, ரூ.12.33 கோடியும் பரிசாக வழங்கப்படும். தவிர, இத் தொடரில் பங்கேற்றுள்ள மீதமுள்ள 6 நாடுகளுக்கும் பரிசு உண்டு.