அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 33 ரன் வித்தியாசத்தில் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 286 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லாபுஷேன் அதிகபட்சமாக 71 ரன் (83 பந்து, 7 பவுண்டரி) விளாசி வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கிரீன் 47 ரன், ஸ்டீவன் ஸ்மித் 44 ரன், ஸ்டாய்னிஸ் 35, ஆடம் ஸம்பா 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4, மார்க் வுட், அடில் ரஷித் தலா 2, டேவிட் வில்லி, லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பேர்ஸ்டோ, மலான் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஸ்டார்க் வீழிய முதல் பந்திலேயே பேர்ஸ்டோ கோல்டன் டக் அவுட்டாக… இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஜோ ரூட் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். இங்கிலாந்து 19 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், மலான் – ஸ்டோக்ஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது.
இருவரும் 3வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தனர். மலான் 50 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் ஹெட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து 25.1 ஓவரில் 106 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து மீண்டும் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், ஸ்டோக்ஸ் – மொயீன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஸ்டோக்ஸ் 64 ரன் (90 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஸம்பா சுழலில் ஸ்டாய்னிஸ் வசம் பிடிபட, ஆஸி. கை ஓங்கியது.
மொயீன் 42 ரன் எடுத்து ஸம்பா பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வில்லி 15 ரன் எடுத்தார். கடைசி வரை போராடிய வோக்ஸ் 32, அடில் ரஷித் 20 ரன்னில் ஆட்டமிழக்க…இங்கிலாந்து 48.1 ஓவரில் 253 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 33 ரன் வித்தியாசத்தில் 6வது தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸம்பா 3 விக்கெட், கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 2, ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி 7 போட்டியில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.