பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம்(மூடா) மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்விவகாரத்தில் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள முதல்வர் சித்தராமையாவும் காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி கூட்டம் நடத்தப்படவிருப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மூடா விவகாரம் குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 22ம் தேதி காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. விதான சவுதாவில் இக்கூட்டம் நடக்கிறது. மூடா வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவதற்கான வியூகம் அந்த கூட்டத்தில் வகுக்கப்படும்.இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோர் இன்று பெங்களூரு வருகின்றனர்.