அண்ணாநகர்: இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 1,000க்கும் விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இல்லத்தரசிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒசூர், திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.350க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.180க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், அரளி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1,000க்கு விற்கப்படுகிறது.
கனகாம்பரம் ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.700க்கும், காமந்தி ரூ.260க்கும், சமங்கி ரூ.200க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும், அரளி ரூ.250க்கும் விற்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் 1 கிலோ மல்லி ரூ.1,200க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.900க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், சாமந்தி ரூ.300க்கும், சம்பங்கி ரூ.220க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும், அரளி ரூ.270க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், ‘இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அனைத்து பூக்களின் விலையும் இருமடங்காக உள்ளது. இருப்பினும் அனைத்து பூக்களும் விரைவில் விற்று விட்டது. அதிக விலை கொடுத்து வாங்க நினைத்தாலும் பூக்கள் கிடைக்காமல் மக்கள் தத்தளித்தனர்’ என்றனர். கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூக்களின் விலை உயர்ந்தாலும் பூக்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அதனால் அனைத்து பூக்களும் விரைவில் விற்று விட்டது. சில பேர் பூக்கள் கிடைக்காமல் தத்தளித்தனர். ஆடி மாதம் மற்றும் விசேஷ நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’ என்றார்.