*ஆடி மாதத்தில் ஈசனின் சக்தியை விட பார்வதி தேவியின் சக்தி அதிகமாக இருக்கும். அதனால் தான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
*ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் சாற்றப்படும் வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
*ஆடி மாத பௌர்ணமி நாளில் தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. இந்நாளில் வைணவ ஆலயம் சென்று ஹயக்ரீவரை வணங்கிவர நல்ல பலன் கிட்டுமாம்.
*திருமாலுக்கு வாகனமாக அமைந்த கருடன் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் தான் அவதரித்தாராம்.
*ஆடிமாத பௌர்ணமி தினத்தன்று குருவுக்கெல்லாம் குருவாகத் திகழ்ந்த வியாசமுனிவரை நினைத்து வணங்கிட கல்விச் செல்வம் மேன்மேல் பெருகுமாம்.
*கஜேந்திரன் என்ற யானையை முதலைக் கவ்விய போது அந்த யானையைத் திருமால் காப்பாற்றிய ‘‘கஜேந்திர மோட்ச வைபவம் ஆடி மாதத்தில் தான் நிகழ்ந்ததாம்.
*பார்வதி தேவி பரமசிவனிடம் உடம்பில் பாதியினை மகா விஷ்ணுவுக்குத் தரவேண்டும் என்று தவமிருந்து வேண்டிக் கொள்ள ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி தந்தார். ஆடிமாத பௌர்ணமியில் உத்திராடம், நட்சத்திரத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்தது. இந்த வைபவம் ‘‘ஆடித்தபசு’’ விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
*சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் ஆகும். ஆடிப்பூரத்தையொட்டி ஸ்ரீஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறுகிறது. அவ்வமயம் மதுரை கள்ளழகர் கோயிலிலிருந்து அனுப்பப்படும் பட்டுப்புடவையையே ஸ்ரீஆண்டாள் அன்னைக்கு அணிவிப்பார்களாம்.
*திருநெல்வேலி நெல்லையப்பர் காந்தி மதி ஆலயத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் வளைகாப்பு வைபவம் மிகப் பிரசித்தி பெற்றதாகும். சீமந்த விழாவில் அம்பாளின் வயிற்றுப் பகுதியில் ஊறவைத்த பயறு வகைகளை வைத்துக் கட்டுவார்களாம். ஒரு கர்ப்பிணி போல் காட்சி தரும் அம்பாளை புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால் மழலை பாக்கியம் கிட்டுமாம்.
*கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை என்ற ஊரில் முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று முருகனுக்கு கூடை கூடையாக மலர்களைக் கொட்டி அபிஷேகம் செய்வார்கள். இதனை அந்த பகுதி மக்கள் ‘‘ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல் முருகனுக்கு’’ என்று சொல்வார்களாம்.
*ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மிகவும் விசேஷமானது. ‘‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி’’ என்பது பழமொழி! ஆடிச் செவ்வாயில் எண்ணெய் தேய்த்து தலை குளிக்கிற பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
*‘‘ஆடி வெள்ளி’’ அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் குடும்ப தெய்வமான பூவாடைக்காரியை (கன்னி தெய்வம்) பூஜித்து வணங்கிட குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம்.
*ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியத்தை அளிக்குமாம். அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால் ஆண்டு முழுவதும் பிதுர் கடன் தீர்த்த பலன் கிடைக்குமாம்.
*ஆடி மாசம் சுக்ல தசமியில் ‘‘திக் தேவதா விரதம்’’ இருந்து திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கிப் பூஜித்தால் நினைத்தது நடக்குமாம்.
*திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ‘‘ஸ்ரீ வனதுர்க்கை அம்மன்’’ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் தீ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
*ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப் பெருக்கு விழா விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்தில் எழுந்தருள்வாராம்.
*ஆடிமாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை விரதமிருந்து வழிபட்டால் செல்வம் பெருகுமாம்.
*ஆடி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று அன்னதானம் செய்தால் சகல சௌபாக்கியங்கள் கிட்டுமாம்.