ஆடி அமாவாசையில் விரதம் கடைபிடிப்பது மட்டுமின்றி காகத்திற்கு உணவு வைப்பதற்கும் சில முறை உள்ளது. அதன் படி உணவளித்தால் முன்னோர்களின் ஆசிகள் நமக்கு கிடைப்பதுடன், நமக்கு வாழ்க்கையில் படிப்படியாக வளர்ச்சி என்பத ஏற்படும். நம்முடைய பாவங்கள் குறையும். பித்ருதோஷம் உள்ளிட்ட தோஷங்களில் இருந்து விட முடியும்.
அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமானதாகும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதாலும், பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் நம்மை காண பூமிக்கு வர புறப்படுவதற்கான காலம் என்பதாலும் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமணானதாக கருதப்படுகிறது. அதிலும் தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகமான சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையிலும், கர்மகாரகன் என சொல்லப்படும் சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்திலும் இணைந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 04ம் தேதி ஆடி அமாவாசை அமைகிறது. இதனால் இது தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அமாவாசையில் காகத்திற்கு சாதம் வைக்கும் பழக்கம் :
பொதுவாக அமாவாசை என்றாலே காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் நம்முடைய வழக்கம். காகத்திற்கு இலை போட்டு, உணவு படைத்து, அது சாப்பிட்ட பிறகே முன்னோர்களுக்கு படைத்து விட்டு ,நாம் உணவு சாப்பிடும் வழக்கம் உள்ளது. எத்தனையோ பறவைகள், உயிரினர்கள் இருக்கும் போது அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் உணவு வழங்கப்படுவது ஏன் பலரும் நினைப்பது உண்டு. இதற்கு ஜோதிட ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
காகம், கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கக் கூடிய கிரகமான சனீஸ்வர பகவானுக்குரிய வாகனம் ஆகும். இது தான் பூலோகத்தில் நாம் செய்யும் திதி, தர்ப்பணம் போன்ற சிரார்த்த காரியங்களை பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களிடம் கொண்டு போய் சேர்க்கின்றன என சொல்லப்படுகின்றன. காகம், சாதாரணமாக குப்பையில் கிடக்கும் பொருட்களையும், இறந்த எலி போன்றவற்றையும் சாப்பிடும். அதே சமயம் நாம் இலை போட்டு வைக்கும் உணவுகளையும் சாப்பிடும். அது போல கர்ம வினைகளால் நாம் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும், அவற்றை நீக்கி, வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்கும் நிலையை கொடுக்கும் என்பதாலேயே காகத்திற்கு அமாவாசை நாளில் உணவு வைக்கப்படுகிறது.
அமாவாசை அன்று முன்னோர்கள், சனீஸ்வரனின் வாகனமான காகத்தின் வடிவிலேயே வந்து நாம் படைக்கும் உணவுகளை நம்முடைய முன்னோர்கள் சாப்பிடுவதாக ஐதீகம். நமக்கு நல்ல நேரம் இந்தாலும் காகங்கள் நாம் வைக்கும் உணவுகளை உடனடியாக சாப்பிட்டு விடும். ஒருவேளை நமக்கு நேரம் சரியில்லை. கெட்ட கர்மாக்கள் அதிகம் உள்ளது என்றால், காகங்கள் சற்று யோசித்து, தாமதமாக தான் உணவை சாப்பிடும். சில நேரங்களில் காகம் நாம் வைக்கும் உணவை சாப்பிடாமல் செல்வதும் உண்டு. சனீஸ்வரன் மற்றும் முன்னோர்களின் வடிவமாக காகங்கள் பார்க்கப்படுவதாலேயே காகம் கரைவதற்கு, தலையில் தட்டுவது போன்றவற்றிற்கு பலன்கள் பார்க்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது. நம்முடைய முன்னோர்கள் காகங்கள் வழியாக சில விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக ஐதீகம்.
ஆடி அமாவாசை அன்று செய்யப்படும் சமையலில் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக முன்னோர்களுக்கு விருப்பமான உணவுகளை அன்று செய்து, படையல் இட்டு வழிபடுவது சிறப்பு. அப்படி முன்னோர்களுக்கு விருப்பமான உணவுகள், வாழைக்காய், எள், நெய் கலந்த சாதத்தை காகத்திற்கு வைப்பதால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். அதுவும் சூரியனை சாட்சியாக வைத்து, உச்சிப் பொழுதிலேயே காகத்திற்கு உணவளிக்க வேண்டும். அப்படி அளிப்பதால் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் என்பது ஏற்படும்.