நெல்லை: திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கல் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று நெல்லை வழியாக செல்லும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் ஆற்றுக்கல் பகவதியம்மன் கோயிலில் பொங்கல் விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே கேரளாவில் சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில், நெல்லை வழியாக செல்லும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களையும் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நேற்று 12ம் தேதி இரவில் மதுரையில் புறப்படும் மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) இன்று அதிகாலை பள்ளியாடியில் 4.57 மணிக்கு ஒரு நிமிடமும், குழித்துறை மேற்கில் 5.08 மணிக்கு ஒரு நிமிடமும், திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையத்தில் 5.49 மணிக்கு ஒருநிமிடமும் நின்று செல்லும். இவை அனைத்தும் அந்த ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்களாகும்.
இன்று (13ம் தேதி) கொல்லத்தில் இருந்து புறப்பட்டு வரும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் தெற்கில் மாலை 4.15 மணிக்கும், பாலராமபுரத்தில் 4.24 மணிக்கும், பள்ளியாடியில் 4.58 மணிக்கும் ஒருநிமிடம் நின்று செல்லும். குருவாயூர் எக்ஸ்பிரசும் இன்று காலை 1.44 மணிக்கு துறவூரிலும், காலை 2.02 மணிக்கு மராரிக்குளத்திலும், ஹரிபாடியில் காலை 2.48 மணிக்கு ஒருநிமிடமும் நின்று செல்லும். இவ்வாறு மொத்தம் 31 ரயில்களுக்கு இன்று கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.