சென்னை: தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும், மின் நிறுவும் திறனை அதிரிக்கவும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்வாரியம் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. இதுபோன்ற மின் உற்பத்தி நிலையங்களை தவிர பருவ காலங்களில் காற்றாலை மற்றும் சோலார் தகடுகள் மூலம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பகலில் சூரிய சக்தி மின்நிலையங்கள் மற்றும் பருவகாலங்களில் காற்றாலைகளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கிறது.
தமிழகத்தில் மின்வாரியம் மற்றும் தனியார் மூலம் 15 ஆயிரம் மெகாவாட் அளவில் மின் உற்பத்தி செய்யும் வகையிலான காற்றாலைகள் மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அலகுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை நிறுவுவது தொடர்பான விதிகள் மட்டுமே அரசிடம் உள்ளது. இதையடுத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கவும், 2030ம் ஆண்டுக்குள் 100 கிகா வாட் ஒட்டுமொத்த மின்நிறுவ திறனை அடையவும், எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.
இது குறித்து எரிசக்தித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2030ம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 50 சதவீதம் குறைப்பதை இலக்காக கொண்டுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கைக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு தனியார் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த 3 மாதங்களாக காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும். சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பெற்ற பின் அதில் உள்ள நன்மை, தீமைகளை அரசு ஆராயும். அதையடுத்து கொள்கை இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையானது மாநிலத்தை சரியான திசையில் வழிநடத்தும். இது முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையானது மாநிலத்தை சரியான திசையில் வழிநடத்தும். இது முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.