*முதலை, பறவைகளும் விரைவில் வர உள்ளது
வேலூர் : வேலூர் மாவட்ட வன அலுவலகத்துக்கு உள்பட்டது அமிர்தி வன உயிரியல் பூங்கா. வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த உயிரியல் பூங்கா கடந்த 1967ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு புள்ளி மான்கள், மயில்கள், முயல்கள், முதலைகள், நீர்ப் பறவைகள், மலைப்பாம்பு, முள்ளம்பன்றிகள், பருந்து, கண்ணாடிவிரியன், நாகப்பாம்பு, காதல் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பூங்காவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்திழுக்கும் வகையில் அமிர்தி உயிரியல் பூங்காவுக்கு கூடுதலாக விலங்குகள் கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் குள்ளநரி 5 குட்டிகளை ஈன்றுவிட்டு சென்றுள்ளது.
இதில் 4 குட்டிகள் இறந்து விட்டநிலையில், தவித்துக்கொண்டிருந்த ஒரு குட்டிைய மீட்டு வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இந்த குள்ளநரிகுட்டி வேலூர் அமிர்தி பூங்காவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவையில் இருந்து அமிர்திக்கு நேற்று கொண்டு வரப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு ‘தோனி’ என பெயரிடப்பட்டுள்ளது. அவற்றை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘அமிர்தி வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்திழுக்க கூடுதலாக விலங்குகள் கொண்டு வருவற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது குள்ளநரி வந்துள்ளது. மேலும் முதலைகள், பாம்பு வகைகள், பறவை இனங்களை விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.