நமது நாட்டில் வழக்கத்தில் இருந்த ஐபிசி (1860) எனப்படும் இந்திய தண்டனை சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்று மாற்றப்பட்டுள்ளது. 1973ம் ஆண்டின் குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு (சிஆர்பிசி) பதிலாக பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1872ம் ஆண்டின் இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஆக்ட்) பாரதிய சாஷ்ய அதினியம் (பிஎஸ்ஏ) என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் மூன்றும் கடந்த 1ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த புகை குப்பி வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்களை நிறைவேற்றுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் சட்ட நிபுணர்களிடமும் முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை என்ற அதிருப்தி எழுந்தது. அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி ஆரம்பத்திலேயே புகைச்சலை கிளப்பிய புதிய சட்டமானது தொடர்ந்து கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர்கள் அணி, அணியாக திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற புறக்கணிப்பு நிகழ்வுகளிலும் பலர் ஈடுபட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் புதிய சட்டங்கள் மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் வைத்துள்ள குட்டு, சட்டநிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘‘புதிய சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை. குறிப்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறாமல் சில பிரிவுகளை மாற்றம் செய்துள்ளனர். சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர். இது பல்வேறு தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகம் குறித்த கேள்வி எழுகிறது. இதேபோல் தண்டனைகளை குறைப்பதில் குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுனருடைய அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு முரண்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும்,’’ என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுரேந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்களை உன்னிப்பாக கேட்ட நீதிபதிகள் ‘‘ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன. சிவில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட போதும் இதுபோன்ற எதிர்ப்பு இருந்தது. எனவே இது குறித்து சட்டஆணையத்தை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்,’’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒன்றிய அரசு இது குறித்து பதில் அளிக்க 4வாரம் அவகாசமும் வழங்கியுள்ளனர். சமூகத்தை நல்வழிப்படுத்த சட்டங்கள் என்பது மிகவும் அவசியம். ஆனால் அந்த சட்டமானது இனம், மொழி, அதிகாரப்பரவல் கடந்து அனைவரும் ஏற்கும்படியாக இருக்க வேண்டும். மொத்தத்தில் புதிய சட்டங்கள் மக்களை பயமுறுத்துவதை விட, குழப்பத்தில் ஆழ்த்தாமல் இருக்கவேண்டும். இந்த சட்டங்களிலும் அந்ததெளிவு இருக்க வேண்டும் என்பதற்காகவே குட்டு வைத்துள்ளது நீதிமன்றம் என்பது சட்டநிபுணர்களின் குரலாக ஒலிக்கிறது.