ஊட்டி : மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த முன்னேற்றத்திலும் பள்ளி மேலாண்மை குழு கவனம் செலுத்தி பள்ளியின் முழுமையான வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார். ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து, பள்ளி மேலாண்மை குழு மறு நிகழ்வினை பார்வையிட்டு, மாணாக்கர்களின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பானது மாநிலம் முழுவதும் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.நீலகிரி மாவட்டத்தில், உங்கள் குழந்தைகள் படிக்கின்ற பள்ளியில் அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது பெற்றோர்களின் கடமை. அதற்கு பெருந்துணையாக இருப்பது பள்ளி மேலாண்மைக் குழுவாகும். எனவே பெற்றோர்கள் முழுமையாக பள்ளி மேலாண்மை குழுவில் தங்களை இணைத்துக் கொண்டு பள்ளியின் முன்னேற்றத்திற்கான திட்டத்தை ஏற்படுத்தி பள்ளியின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த முன்னேற்றத்திலும் பள்ளி மேலாண்மை குழு கவனம் செலுத்தி பள்ளியின் முழுமையான வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைக் கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தலைவர், துணைத் தலைவர்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு கலெக்டர் பேசினார்.இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா,ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார்,ஊட்டி தாசில்தார் சரவணக்குமார்,பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பார்வையாளர் மோகன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தர் (கல்வி)பிரமோத், பள்ளி ஆசிரிய,ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.