வேளச்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் (18). இவர் வேளச்சேரி எம்ஜிஆர் நகரில் வீடு எடுத்து தங்கி, டான்சி நகரில் உள்ள ஒரு துரித உணவு கடையில வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அர்ஜூன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், இன்று (நேற்று) அதிகாலை டீ குடிப்பதற்காக எம்ஜிஆர் நகர் 9வது குறுக்கு தெருவில் நடந்து சென்றபோது 2 பேர் என்னை வழி மறித்து செல்போன் பறிக்க முயன்றனர். நான் தடுத்ததால் எனது கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றேன். மருத்துவரின் அறிவுறுத்தலின்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். இைதயடுத்து குற்றப்பிரிவு போலீசார்சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தீவிர விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பிளஸ் 2 படிக்கும் தன்னுடைய 17 வயது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது உனக்கு விபத்து நடந்ததை அடுத்து உன் முகம் அசிங்கமாக உள்ளது. அதனால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என கூறி காதலுக்கு பிரேக்கப் என்று சொல்லி விட்டு அதோடு போனை துண்டித்து விட்டாள்.
இதனால் வாழ்க்கையை வெறுத்த நான் ரூமில் இருந்த சிறிய கத்தியை எடுத்து கொண்டு 9வது குறுக்கு தெருவுக்கு வந்து பின் கத்தியால் தனக்குத்தானே அறுத்துக் கொண்டேன். பின்னர் கடை முதலாளிக்கு தனது காதல் விவகாரம் தெரியாமல் இருப்பதற்காக உண்மையை மறைத்து நாடகமாடியதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.