காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டையில் உள்ள சின்னதர்கா அருகே வசிப்பவர் நவுஷாத் (30), மீன்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 5ம்தேதி மாலை வண்ண வண்ண மீன்களை பார்க்க 8 வயது சிறுமி வந்துள்ளார். அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த நவுஷாத், வண்ண மீன்கள் தருவதாகவும், சாக்லெட் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய சிறுமி, அவருடன் சென்றார். வீட்டின் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு திடீரென இளைஞர்கள் வந்ததை பார்த்த நவுஷாத், தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சிறுமியை மீட்ட இளைஞர்கள், அவரை நாயுடுபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் சிறிது நேரத்திற்கு பிறகு நவுஷாத் மீண்டும் சிறுமியை தேடி பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள், நவுஷாத்தை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை நாயுடுபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி நவுஷாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.