விருதுநகர்: ‘பொது சிவில் சட்டம் பாஜவுக்கு அழிவை தரும்’ என காதர் மொகைதீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன் விருதுநகரில் நேற்று அளித்த பேட்டி: பொது சிவில் சட்டம் எப்படி வரப்போகிறது என தெரியவில்லை. அறிவிக்கும் முன்பே கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இச்சட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். பொது சிவில் சட்டம் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜ முயல்கிறது. இதனால் பாஜவிற்கு எந்த ஆதாயமும் இல்லை. ஆதாயம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செய்கிறார்கள். ஆனால் பாஜவிற்கு அது அழிவைத்தான் தரும்.
நாடு முழுவதும் பாஜவிற்கு விவரிக்க முடியாத அளவிற்கு எதிர்ப்பு அலை நிலவுகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மேலும் பாஜவின் அறிவிப்புகள் அனைத்தும் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் தக்காளி, வெங்காயங்களை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தி வைத்துள்ளது. மறைமுகமாக விலைவாசி ஏற்றத்தை விரும்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தேர்தல் அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். அதன்படி செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.