Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

*கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ரோகிணி(57). இவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திடீரென தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிகொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் கனகவள்ளி மற்றும் போலீசார், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரோகிணி கூறுகையில், நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், தனக்கு அவசரமாக ரூ.19 லட்சம் பணம் கடனாக வேண்டும் என கேட்டார். வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து பின்னர் பணத்தை திருப்பி தருவதாக அவர் கூறியதை நம்பி, வேறொருவரிடம் கடனாக ரூ.19 லட்சம் பெற்று கடந்த 2012 ம் ஆண்டு கொடுத்தேன். அந்த பணத்தை திரும்ப தருமாறு பலமுறை கேட்டும் இதுவரை தரவில்லை. எனக்கு கடன் கொடுத்த நபர்கள் என்னை தொந்தரவு செய்து வருகிறார்கள்.

இதனால் நான் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். இது சம்மந்தமாக விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றவியல் பிரிவு, கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகம் மற்றும் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார். இதையடுத்து போலீசார், இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடாது, முறைப்படி மனு அளிக்கும்படி அறிவுரை கூறி, அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.