*ரஷ்ய நாட்டினர் 6 பேர் உள்பட 9 பேரிடம் விசாரணை
கூடங்குளம் : நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்திய அரசு மற்றும் ரஷ்ய நாட்டின் கூட்டு முயற்சியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் அணுசக்தி துறைக்கு சொந்தமான ரோசோட்டம் எனப்படும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகத்தைச் சேர்ந்த சிஸ்லோவா இரினா தலைமையில் அண்டன் மினியோவ் அலெஸ்சாண்டர் சேவட்சோ டிமிட்ரி டர்பின் அலெக்ஸ் யூனோவ் அண்டன் படுனோவ் உட்பட 6 ரஷ்யர்கள் கூடங்குளம் வந்தனர்.
இவர்கள் கூடங்குளம் அணுஉலை குறித்து டாக்குமெண்டரி படம் எடுக்க வந்ததாகக் கூறப்படும் நிலையில் இதற்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, தினேஷ் தளவாய், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவரான சஜிப் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இதுகுறித்து தெரியவந்ததும் விரைந்து வந்த கூடங்குளம் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார், இவர்களை ரகசிய இடத்திற்கு கொண்டுசென்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அணுஉலை குறித்து டாக்குமென்ட்ரி படம் எடுப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தபோதும் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
தொடர்ந்து நடந்த விசாரணையில் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இந்திய குடியரசுக்கும் இடையே அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துதல் மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றில் நீண்டகால ஒத்துழைப்பு குறித்தும் ரோசோட்டம் பிரிவுகளின் செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும், புதிய வணிக வாய்ப்புகளைத் தேடுவதற்கும், உலக சந்தையில் ரஷ்ய அணுசக்தித் துறையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும், திறமையான வணிகத்தை உருவாக்குவதற்கும் சந்தைப்படுத்தல், வீடியோக்களின் படப்பிடிப்பில் பங்கேற்க ரோசோட்டம் அதிகாரி சிஸ்லோவா இரினா தலைமையிலான ரஷ்ய குழுவினர் அனுமதி இன்றி இடிந்தகரை ஊருக்கு மேற்கே கூடங்குளம் அணு உலைக்கு 1 கி.மீ. தொலைவில் கிழக்கு பகுதியில் இருந்து போட்டோ எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதோடு அவர்கள் எடுத்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட பிறகே விடுவிக்கப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.