பெரம்பூர், ஜூன் 6: கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). இவர் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் தனது வீட்டின் அருகே கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். வெங்கடேசன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதனை திருப்பி வைத்து வெங்கடேசனை அடித்துள்ளனர். பின்னர், அவரிடம் இருந்த 800 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர்.
வெங்கடேசன் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் (எ) மனோஜ் (22) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை இருவரையும் கைது செய்தனர்.