டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்கள் போராட்டம் காரணமாக ஆக.5ம் தேதி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதற்கு பிறகு அங்குள்ள இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 4 முதல் இந்துக்கள் மீது 2,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. அக்டோபர் 25 அன்று சாட்டோகிராம் நகரில் நடந்த பேரணி தொடர்பாக பிரபல இந்துமத தலைவர் சந்தன் குமார் தார் உட்பட 19 இந்து தலைவர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்தும், இடைக்கால அரசு இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் தென்கிழக்கு நகரமான சாட்டோகிராமில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். வங்கதேச நாட்டில் உள்ள 17 கோடி மக்களில் இந்துக்கள் 8% ஆகவும், முஸ்லிம்கள் 91% ஆகவும் உள்ளனர். இதே போல் டாக்காவில் இன்று மேலும் ஒரு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* ஹசீனா ஆதரவு கட்சி அலுவலகம் எரிப்பு
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கூட்டணிக் கட்சியான ஜாதியா கட்சியின் தலைமையகம் சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்டது. தலைநகர் டாக்காவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை மர்ம நபர்கள் முற்றுகையிட்டு, அங்கு இருந்த ஆதரவாளர்களை தாக்கிவிட்டு தீவைத்து அலுவலகத்தை எரித்தனர்.