சென்னை: சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடிஆர் ரக சிறிய விமானங்கள் புறப்பாடு இடம் டெர்மினல் ஒன்றில் இருந்து, டெர்மினல் நான்குக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், விஜயவாடா, ராஜமுந்திரி, கண்ணூர், கோழிக்கோடு, மங்களூரு, மைசூர் உள்ளிட்ட விமானங்கள் டெர்மினல் நான்கிலிருந்து புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையங்களாக டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 செயல்பட்டு வருகின்றன. டெர்மினல் ஒன்றில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாஷா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெர்மினல் 4 உள்நாட்டு முனையத்தில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறன.
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இதில் மாற்றங்களை இந்திய விமான நிலைய ஆணையம் செய்துள்ளது. அதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திலிருந்து இயக்கப்படும் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக புறப்பாடு விமானங்கள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், டெர்மினல் 4ல் இருந்து இயக்கப்படும். ஆனால், இண்டிகோ ஏர்லைன் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் டெர்மினல் ஒன்றில் இருந்து இயக்கப்படும். அதே நேரத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பெரிய ரக விமானங்கள், ஏடிஆர் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் வழக்கம்போல் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1க்கு வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இண்டிகோ ஏர்லைன்ஸில் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படும் தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், மங்களூரு, கோழிக்கோடு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், கண்ணூர்,
மைசூர் உள்ளிட்ட நகர்களுக்கு ஜூன் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து டெர்மினல் நான்கிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் புறப்பட்டு செல்ல இருக்கிறது. ஆனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், கோவை, அகமதாபாத், கவுகாத்தி உள்ளிட்ட இடங்களுக்கு பெரிய ரக இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் வழக்கம்போல், டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் பெரிய விமானங்கள், ஏடிஆர் ரக சிறிய விமானங்கள் அனைத்தும், வருகை விமானங்களாக வரும்போது, டெர்மினல் ஒன்றில் தான் வந்து தரை இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெர்மினல் ஒன்றில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு, பயணிகள் கூட்டம் நெரிசல் அதிக அளவில் இருப்பதால், அதை சமாளிக்க இதுபோன்று, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.