சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பெலாருஷியன் நாட்டை சேர்ந்த 26 வயதான ஆர்யனா சபலென்கா, தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள 30 வயதான ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். ஏற்கனவே மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்வியாடெக்குடன் மோதிய அரையிறுதியில் 6-3,6-3 என்ற செட் கணக்கில் சபலென்கா வெற்றி பெற்றிருந்தார். இதனால் புத்துணர்ச்சியுடன் இறுதி போட்டியில் களம் இறங்கிய அவர் பெகுலாவின் சர்வீஸை லாவகமாக எதிர் கொண்டு புள்ளிகளை குவிக்க துவங்கினார். பெகுலாவும் தன் பங்கிற்கு புள்ளிகளை சேர்த்தாலும் சபலென்காவின் ஆட்டத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.
இதனால் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இறுதி போட்டியில் 6-3,7-5 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கோப்பையை முத்தமிட்டார். இதன் மூலம் தொடர்ச்சியாக 9 வெற்றிகளுடன் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸில் கோப்பை கைப்பற்றிய பெகுலாவின் வெற்றிப் பயணம் இந்த தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்தது. சபலென்கா சின்சினாட்டி டென்னிஸ் இறுதி போட்டிக்குள் நுழைவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஏடிபி டென்னிஸ் தொடர் ரேங்கிங் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இத்தாலியை சேர்ந்த 23 வயதான ஜானிக் சின்னர், 20வது இடத்தில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான பிரான்சஸ் டையோபே உடன் மோதினார்.
கால் இறுதியில் ஆண்டிரே ரூப்லெவ், அரையிறுதியில் அலெக்சாண்டர் வெரேவ் என வெற்றி கண்ட சின்னர் இறுதி போட்டியில் கோப்பை வெல்லும் முனைப்பில் களம் இறங்கினார். இதே போல் ஹோல்ஜர் ருனேவுடனான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிரான்சஸ், சின்னரை வீழ்த்தி கோப்பை வெல்லும் கனவுடன் களம் கண்டார். லிண்டர் பேமிலி டென்னிஸ் மையத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இருவரும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இரண்டாவது செட்டில் தனது தலைக்கு மேல் வந்த பந்தை புள்ளியாக மாற்றும் அரிய வாய்ப்பை பிரான்சஸ் தவறவிடவே அதன் பிறகு ஆட்டத்தின் போக்கை மாற்றும் எந்தவித வாய்ப்பையும் சின்னர் அவருக்கு வழங்கவில்லை. இதனால் 1 மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இறுதி போட்டியில் 7-6(4), 6-2 என்ற கணக்கில் சின்னர் வெற்றி பெற்று சின்சினாட்டி கோப்பையை தட்டிச் சென்றார். ஏற்கனவே மெல்போர்ன், ரோட்டர்டேம், மியாமி மற்றும் ஹால்லே என 4 ஏடிபி கோப்பைகளை சின்னர் வென்றிருந்தார். இன்று தனது 5வது கோப்பையை கைப்பற்றியதோடு 2024ம் ஆண்டில் 2 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் தன் வசம் ஆக்கினார் ஜானிக் சின்னர்.